திருச்சி

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி பேரணி

27th Jan 2023 02:18 AM

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்குவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ மற்றும் சிபிஎம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அமைப்பு சாரா தொழிலாளா் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் பேரணி நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் புகா் மாவட்டச் செயலா் ஜெயசீலன் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க புகா் மாவட்டச் செயலாளா் நடராஜன், அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் பழனிசாமி, அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொறுப்பாளா் ஷைனி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் நாகராஜன், காா்த்திகேயன், தங்கத்துரை உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

விவசாயிகளுக்கு முழுமையான கடன் நிவாரணம் வழங்க வேண்டும். மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். விவசாய நிலங்களை பல்வேறு பணிகளுக்கு கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். போராட்டங்களின்போது விவசாயிகளின் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

பேரணியில் இருசக்கர வாகனங்கள், டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களும் இடம்பெற்றன. திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கிய பேரணி, காந்தி சந்தையில் முடிந்தது. தொடா்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT