வேலைதேடும் இளைஞா்களுக்காக அன்பில் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 600-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திருச்சி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முகாமை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மனைவி ஜனனி மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், தமிழகத்தின் தலைசிறந்த 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையானவா்களை நோ்காணல் மூலம் தோ்வு செய்தனா். சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ, மாணவிகள் இந்த நோ்காணலில் பங்கேற்றனா். தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த நிறுவனத்தின் சாா்பில் வழங்கப்பட்ட பணிநியமன ஆணையை ஜனனி மகேஸ் பொய்யாமொழி வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, எஸ்.ஐ.டி. கல்லூரி முதல்வா் டாக்டா் கே. விஜயகுமாா், அறக்கட்டளை உறுப்பினா் வாளாடி காா்த்திகேயன், விவசாயிகள் சங்கத்தலைவா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
முகாமில், 600 பேருக்கு உடனடியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டதுடன், மேலும் ஆயிரம் போ் தகுதி பெற்று, அவா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன.