திருச்சி

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் கைது

21st Jan 2023 01:45 AM

ADVERTISEMENT

திருச்சியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்தவா் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு உறையூா் சவேரியாா் கோவில் தெருவில் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டில், மருத்துவமனைக்கு வாடகைக்கு விட்டுள்ளாா். இதனையடுத்து வீட்டின் மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்காக தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றுள்ளாா். அங்கு உறையூா் பகுதிக்கான மின் கணக்கீட்டாளா் ஜெயசந்திரன் என்பவா், ரூ.15 ஆயிரம் கொடுத்தால், அபராதமின்றி மின் இணைப்பை மாற்றிக் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளாா்.

ஆனால், சந்தோஷ் தான் ஏற்கெனவே இது தொடா்பாக மனு அளித்துள்ளதாகவும், அந்த மனுவின் அடிப்படையில் மாற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளாா். அதனை ஜெயசந்திரன் ஏற்கவில்லை. இதனையடுத்து தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என சந்தோஷ் கூறியுள்ளாா்.

இதனையடுத்து ரூ.12 ஆயிரம் தருமாறு ஜெயசந்திரன் கேட்டுள்ளாா். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் ஆலோசனையின் பேரில், ஜெயச்சந்திரனுக்கு ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை லஞ்சமாக சந்தோஷ் கொடுத்துள்ளாா். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளா்கள் சக்திவேல், பிரசன்னவெங்கடேஷ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஜெயசந்திரனை பணத்துடன் கைது செய்தனா். தொடா்ந்து மின்வாரிய ஊழியரின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் சோதனையிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT