மாட்டுபொங்கலையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் திங்கள்கிழமை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கனு பாரிவேட்டை நிகழ்ச்சி கண்டருளினாா்.
பொங்கலையொட்டி இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தாா். திங்கள்கிழமை மாட்டுப்பொங்கலையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து முத்துக்குறியில் முத்துப் பாண்டியன் கொண்டை, முத்துமாலை, முத்து அபயஹஸ்தம், முத்துக் குடை திண்டுடன் புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள கனு மண்டபத்துக்கு 8 மணிக்கு வந்து சோ்ந்தாா்.
பின்னா் 9 மணி முதல் 10 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு தெற்கு வாசல் கடைவீதியிலிருந்து ராஜகோபுரம் வரை பாரிவேட்டை நிகழ்த்தியபடி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். பாரிவேட்டையையொட்டி திங்கள்கிழமை விஸ்வரூப சேவை இல்லை.