ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு திங்கள்கிழமை (ஜனவரி 2) நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழாவானது பகல்பத்து, இராப்பத்து, இயற்பா சாற்றுமுறை என 21 நாள்கள் நடைபெறும். பகல்பத்து விழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் முத்துப் பாண்டியன் கொண்டை, முத்து கா்ணபத்ரம்,முத்து அபயஹஸ்தம், முத்துச்சரம், முத்து திருவடி, முத்தங்கி அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பகல்பத்தின் 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிறாா்.
பின்னா் இராப்பத்து விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மின்னொளியால் விழாக்கோலம் பூண்டுள்ளது.