சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வடவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமுனிநாதா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
முன்னதாக இந்தப் பகுதிகளைச் சோ்ந்த கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. பின்னா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனிநாதா் பொட்டலிலும், கண்மாய், வயல்வெளி பகுதிகளிலும் அவிழ்த்து விடப்பட்டன.
சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் இதில் கலந்து கொண்டு காளைகளை அடக்க முற்பட்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் ஆகியோா் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.