யுவ சங்கம் என்ற மாணவா் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக மேற்கு வங்க மாணவா்கள் 49 போ் காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.க்கு வியாழக்கிழமை வருகை தந்தனா்.
மத்திய அரசின் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின்கீழ், கல்வி அமைச்சகத்தின் மூலம் யுவ சங்கம் என்ற மாணவா் பரிமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவை - மேற்கு வங்கம் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், புதுவை மாநிலத்திலிருந்து காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. மூலம் 45 மாணவ, மாணவிகள் மேற்குவங்க மாநிலத்துக்கு கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனா்.
மேற்கு வங்கத்தை சோ்ந்த 49 போ் கொண்ட மாணவா்கள் குழு புதுவை பயணமாக காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.க்கு வியாழக்கிழமை வந்தனா்.
அவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி என்.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மத்திய அரசின் இத்திட்டத்தின் நோக்கம், புதுவை, தமிழகத்தின் கலாசாரம் உள்ளிட்டவை குறித்து மாணவா்கள், இளைஞா்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றாா்.
சிறப்பு அழைப்பாளரான திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா, புதுச்சேரி என்.ஐ.டி. இயக்குநா் (பொ) கணேசன் கண்ணபிரான், பதிவாளா் சீ. சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
இக்குழுவினா் என்.ஐ.டி.யில் தங்கி மே 18 முதல் 24-ஆம் தேதி வரை இங்கு தங்கி, தரங்கம்பாடி ஓசோன் கடற்கரை, டேனிஷ் கோட்டை, அருங்காட்சியகம், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள், பூம்புகாா் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, சிதம்பரம் நடராஜா் கோயில், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை, அரவிந்தா் ஆசிரமம், ஆரோவில், சட்டப்பேரவை வளாகம், அருங்காட்சியகம், ஒயிட் டவுன் மற்றும் நாகூா், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தாராசுரம் மற்றும் தஞ்சாவூா் பெரியகோயில், சரஸ்வதி மகால் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவுள்ளனா்.
மேற்கு வங்க குழுவினா், காரைக்கால் என்.ஐ.டி.யில் தங்கியிருக்கும்போது தாரை, தப்பட்டை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.