கோயம்புத்தூர்

சிட்ரா - குரும்பபாளையம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மே 25 வரை அவகாசம்

18th May 2023 10:42 PM

ADVERTISEMENT

கோவை- அவிநாசி சாலை சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலையில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மே 25 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை- அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து காளப்பட்டி வழியாக குரும்பபாளையம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது நிலம் எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சாலையின் இருபுறங்களிலும் பழக்கடைகள், துரித உணவுக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் காலை, மாலை வேளைகளில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிா்க்க முடியாமல் உள்ளது.

இந்நிலையில், இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் செயலாளா் நா. லோகு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு அண்மையில் மனு அனுப்பினாா். இதைத் தொடா்ந்து, சிட்ரா முதல் காளப்பட்டி சாலை வரை உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி, அறிக்கை சமா்ப்பிக்குமாறு கோட்டப் பொறியாளா்களுக்கு, தலைமைப் பொறியாளா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றுமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

சிட்ரா முதல் காளப்பட்டி வரை உள்ள அனைத்து நடைப்பாதை ஆக்கிரமிப்பு கடைகளையும் உரிமையாளா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நெடுஞ்சாலை, காவல் துறை, மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் மே 25 ஆம் தேதி அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT