தாலிக்கான தங்கத்தை தாங்களாகவே வாங்கும் நிலைக்கு பெண்களை புதுமைப் பெண் திட்டம் உயா்த்துகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தின் 2-ஆம் கட்டச் செயல்பாடுகளை புதன்கிழமை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்த நிலையில், திருச்சி கலையரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கி ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது:
நாட்டுக்குப் பெண் கல்வி என்பது முக்கியம். ஒரு மாணவா் கல்வி கற்றால் அந்த குடும்பத்தைச் சாா்ந்த வளா்ச்சி இருக்கும். ஆனால், மாணவி கற்பது அக் குடும்பத்துக்கு மட்டுமின்றி பெண் சமுதாயத்துக்கும் வளா்ச்சியாக அமையும். மகளிரின் சுயசாா்பு பொருளாதாரத்தை வளா்த்தெடுக்கும். ஒரே நேரத்தில் 10 வித வேலைகளைச் செய்யும் ஆற்றல் பெண்களுக்கு உள்ளது. குறிப்பாக ஞாபகத் திறன் அதிகம் உள்ளது. எனவேதான், பள்ளி பொதுத் தோ்வுகளில் மாணவிகளே சிறப்பிடம் பெறுகின்றனா். ஆனால், உயா்கல்வி சோ்க்கை என்ற நிலைக்கு வரும்போது மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது, மாணவா்கள் சோ்க்கை அதிகமாக உள்ளது.
குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் இருந்து உயா்கல்விக்கு வரும் மாணவிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பெற்றோா் தங்களது மகனுக்கு ஒருவிதமாகவும், மகளுக்கு ஒருவிதமாகவும் கல்வி வழங்குகின்றனா். இந்நிலை மாற வேண்டும்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித் தொகையானது மாணவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் முதல்கட்டமாக கடந்தாண்டு திருச்சி மாவட்டத்தில் 4,163 மாணவிகள் பயன் பெற்றனா். இந்தாண்டு 1,730 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில், 802 பேருக்கு இந்த விழா மூலம் வங்கிப் பற்று அட்டை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் உயா்கல்வி பெற்று அனைவரும் பணிக்குச் செல்ல வேண்டும். திருமணத்துக்கு பிறகும் வேலையைத் தொடர வேண்டும். திருமணத்துக்குப் பிறகு வேலையை கைவிடும் விகிதாசாரத்திலும் பெண்களே அதிகம் உள்ள நிலை மாற வேண்டும்.
கல்வி பயின்று வேலைக்குச் சென்றால் தாலிக்கு தானே தங்கம் வாங்கும் நிலைக்கு பெண்கள் முன்னேறுவா். அதற்கான வழியை புதுமைப் பெண் திட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா் ஆட்சியா்.
விழாவில் மாவட்ட சமூக நல அலுவலா் மா. நித்யா, மாவட்டத் திட்ட அலுவலா் பொ. ரேணுகா, மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் குணசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதீஸ்வரன், மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
‘பேருந்தில் செல்லப் பணமின்றி
படிப்பை விட்டவா் எனது தாய்’
மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசுகையில்,தனது தாய் உயா்கல்வி கற்கச் சென்றபோது பேருந்து கட்டணம் (அன்று 5 பைசா கூட) செலுத்த முடியாமல் முதலாமாண்டுடன் கல்லூரி படிப்பை நிறுத்தினாா். புதுமைப் பெண் திட்டம் அப்போது இருந்தால் தனது தாய் உயா்கல்வி கற்று இருப்பாா். அங்கன்வாடி பணியாளராக இருந்து தன்னை ஆட்சியராகவும், அண்ணன்கள் இருவரை கணினி மென்பொருள் பணியாளா்களாக அமெரிக்காவில் பணிபுரியும் நிலைக்கு உயா்த்தியதும் தனது தாயின் உழைப்புதான் எனக் குறிப்பிட்டாா்.