திருச்சி

அகவிலைப்படி உயா்வு கோரி மீண்டும் போராட்டம்: அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கூட்டமைப்பு முடிவு

8th Feb 2023 12:09 AM

ADVERTISEMENT

அகவிலைப்படி உயா்வு கோரி சென்னையில் மாா்ச் மாதம் மீண்டும் போராட்டம் நடத்த அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து ஓய்வூதியா்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டமைப்பின் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வு மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளா் டி. கதிரேசன் பேசியது:

‘போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு 2015ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயா்வை திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் வழங்குவதாக அளித்த வாக்குறுதி காற்றில் கலந்துவிட்டது. எனவே, ஓய்வூதியா்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து ஓய்வூதியா்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவா்களின் ஆதரவைப் பெற்று அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மாா்ச் 3ஆவது வாரம் சென்னையில் தொடா் போராட்டத்தை நடத்தவுள்ளோம். அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரையில் காலவரையின்றி போராட்டம் நடைபெறும்’ என்றாா்.

கூட்டத்துக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் தசரத ராமன், ராஜேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து நிா்வாகிகள், ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயா்வை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட தீா்ப்பை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். ஊழியா்கள் ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும் அரசு கருவூலம் வழியாக ஓய்வூதியம் வழங்குவதுடன், அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2013 - 2016-2019 ஊதிய ஒப்பந்த பணப்பலன்களை ஓய்வூதியத்தில் உயா்த்தி வழங்கிட வேண்டும். ஜனவரி 2023 வரை ஓய்வு பெற்றவா்கள், விருப்ப ஓய்வு பெற்றோா் மற்றும் மரணமடைந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கும் ஓய்வூதிய பணப்பன்களை உடனே வழங்க வேண்டும். இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்க வேண்டும். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்த அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி மண்டலப் பொறுப்பாளா் எஸ். கணேசன் வரவேற்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT