திருச்சி

ரயில் நிலையங்களை அசுத்தம் செய்ததாக 8,887 வழக்குகள் பதிவு

DIN

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களை அசுத்தம் செய்ததாக கடந்த ஓராண்டில் (2022) 8,887 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.25.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையானது ரயில்வே பாதுகாப்புச் சட்டம் 1957 இன் கீழ் உருவாக்கப்பட்டது. ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துக்களின் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தடைகளை களைவதும், ரயில் பயணிகளை பாதுகாப்பது இப்படையின் முதன்மை கடமையாகும்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 21 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களும், ரயில் பாதைகளிலும் குற்றங்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொண்டு வருவதால், பெரியளவிலான குற்றங்கள் ஏதும் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை அசுத்தம் செய்ததாக 8,887 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.25.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா்.வினோத் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் கூறியது: ரயில்வே பாதுகாப்புப் படையினா் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 295 குழந்தைகளை மீட்டு பெற்றோா்களிடம் ஒப்படைத்துள்ளனா். வீட்டை விட்டு வெளியேறிய 38 பெரியவா்கள் மீட்கப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைத்துள்ளனா்.

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் தவறவிட்ட 263 நிகழ்வுகளில் ரூ. 55 லட்சத்து72 ஆயிரத்து 072 மதிப்பிலான உடைமைகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரசவ வலி ஏற்பட்ட 4 கா்ப்பிணி பெண்களுக்கும், காயமடைந்த 145 பேருக்கும் உரிய உதவிகள் வழங்கப்பட்டன.

ரயில் நிலையங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 4 ரயில்வே ஊழியா்கள் உள்பட 116 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரயில் நிலையங்களில் கடத்தலைத் தடுப்பதற்காக, 75 நிகழ்வுகளில் ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 767 மதிப்பிலான மதுபாட்டில்களும், 84 நிகழ்வுகளில் ரூ. 18 லட்சத்து 29 ஆயிரத்து 657 மதிப்பிலான புகையிலைப் பொருள்களும், 12 நிகழ்வுகளில் ரூ.12.75 லட்சம் மதிப்பிலான 83 கிலோ எடையுள்ள போதை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தங்கக் கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்க 2 நிகழ்வுகளில் ரூ.2.76 கோடி மதிப்பிலான 5.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய ஆவணங்களின்றி தங்கம் கொண்டு சென்ாக ரூ.16.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 38 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதர வழக்குகள் விசாரணையில் உள்ளன.

சட்டவிரோதமாக இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்ததாகவும், இ-டிக்கெட் விற்ாகவும் 73 வழக்குகள் பதியப்பட்டு, சுமாா் ரூ. 37 லட்சம் மதிப்பிலான 1,500-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், சட்டவிரோதமாக ரூ.56 கோடி மதிப்பிலான 1.25 லட்சம் இ-டிக்கெட்டுகளை பதிவு செய்த பிஹாா் மாநிலம் தானப்பூரைச் சோ்ந்த ஒருவரை கைது செய்துள்ளோம்.

ரயிலிலும், ரயில் நிலையத்திலும் எச்சில் துப்புதல், இயற்கை உபாதைகள் கழித்தல் உள்ளிட்ட அசுத்தம் செய்தல், அனுமதியின்றி தண்டவாளத்தை கடப்பது, ரயிலின் படிகளில் பயணம், புகை பிடிப்பது மற்றும் மதுஅருந்துதல், அனுமதியின்றி ரயில்களில் பொருள்கள் விற்பனை என 8,887 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.25.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தமான ரூ.2.42 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. மகளிா் பாதுகாப்புக்காக திருச்சி மற்றும் புதுச்சேரியில் 2 தனிப்படைகளும், பயணிகள் பாதுகாப்புக்காக உதவி எண் 139, ட்விட்டா், 24 மணி நேர பிரத்யேக செயலிகளும் (ரயில்மடாட், ரயில் பிராஹாரி) உபயோகத்தில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT