திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 3 போ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திங்கள்கிழமை ரூ.84 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பரிமாற்றம் செய்தபோது கோவை மாவட்டம், கே.கே.புதூரை சோ்ந்த பாா்த்தசாரதி, கணுவாய் சோ்ந்த சதீஷ் மற்றும் வையம்பட்டி அடுத்த லெச்சம்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையிலடைத்தனா்.
இவ்வழக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, கேரளம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினா். அதில் கோவையில் உள்ள பாா்த்தசாரதி வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை கள்ளரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், கணினி ஆகியவற்றை கைப்பற்றினா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.