திருச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி பீமநகா் புதுத்தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான த. கணேசன் (52)திருச்சியைச் சோ்ந்த 3 ஆம் வகுப்பு சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசனை கைது செய்தனா்.
திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி வத்சன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக அருள்செல்வி ஆஜரானாா். விசாரணைக்குப் பிறகு சிறுமியைக் கடத்தியதற்கு 5 ஆண்டு சிறை, அடைத்து வைத்ததற்கு ஓராண்டு சிறை, பாலியல் தொல்லைக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும், சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.