27 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றிப் பணியாற்றி தேசிய விருது பெற்ற திருச்சியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நாடு முழுவதும் விபத்தின்றி அரசுப் பேருந்துகளை இயக்கிய ஓட்டுநா்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விருதுக்கு தமிழகத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 14 பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட், திருச்சி மண்டல தீரன் நகா் கிளையில் பணிபுரியும் எஸ். பால்ராஜும் (56) ஒருவா் ஆவாா்.
விருது பெற்றுத் திரும்பிய அவருக்கு மாவட்ட ஆட்சியரகம் எதிரேயுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை பணிமனை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மண்டலப் பொதுமேலாளா் எஸ். சக்திவேல் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினாா்.
நிகழ்வில் துணை மேலாளா் சாமிநாதன், தொழில்நுட்ப உதவி மேலாளா் மகேந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் இதர ஓட்டுநா்கள், நடத்துநா்களும் அவரைப் பாராட்டினா்.