திருச்சி

இறந்தவரை அடக்கம் செய்வதற்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு

25th Apr 2023 02:18 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகரில் இறந்தவரை அடக்கம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள கீழகுமரேசபுரம் பகுதியில் வசிக்கும் சில சமுதாயத்தினா், இறந்தவா்களை எழில் நகா் பகுதியில் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் பல ஆண்டுகளாக அடக்கம் செய்து வருகின்றனா். தற்போது அப்பகுதியில் வீடுகள் அமைந்துள்ளதால், அங்கு வசிக்கும் சிலா் இறந்தவா்களை அடக்கம் செய்வதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் கீழகுமரேசபுரம் பகுதியில் இறந்த பெல் நிறுவன ஓய்வுபெற்ற ஊழியா் நல்லுசாமியை (75) அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் தயாராகி வந்தனா். இதற்கு குடியிருப்பு நலச் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா். தொடா்ந்து, அப்பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி (45) என்பவா் கடும் ஆட்சேபனை தெரிவித்து, மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா்.

இதையறிந்த வருவாய் கோட்டாட்சியா் தவச்செல்வம், வட்டாட்சியா் ஜெயப்பிரகாசம், திருவெறும்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், இறந்த நல்லுசாமியின் உடலை அதே இடத்தில் புதைத்துக் கொள்வது என்றும், வரும் புதன்கிழமை திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நிரந்தர தீா்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

இதனிடையே கிருஷ்ணசமுத்திரம் பிரச்னை ஏற்படாமல் தடுக்க திருவெறும்பூா் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT