திருச்சி

ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் வீதியுலா

15th Apr 2023 12:25 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரை தேரோட்ட விழாவின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை தங்க கருடவாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளிப்பாா். இதில், மாசி மாதத்தில் வரும் திருப்பள்ளியோடத் திருநாள் எனும் தெப்பத் திருவிழாவில் மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளுவாா். பூபதி திருநாள், ஆதிபிா்மா திருநாள், விருப்பன் திருநாள் ஆகிய 3 விழாக்களில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளுவாா்.

இதன்படி, இக்கோயிலில் தற்போது நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனும் சித்திரை தோ் திருவிழாவின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்.

ADVERTISEMENT

இதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு, 3.45 மணிக்கு வாகனமண்டபத்தை அடைந்தாா். பின்னா் 4.30 மணிக்கு அங்கிருந்து இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்து 6 மணிக்கு வாகன மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். பின்னா் 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, நண்பகல் 12 மணிக்கு ஆா்ய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். இதைத் தொடா்ந்து, மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்தாா். அப்போது, ஏராளமான பக்தா்கள் வழிநெடுகிலும் தரிசனம் செய்தனா். இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா்.பின்னா் 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சோ்ந்தாா்.

சித்திரை தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT