திருச்சி

மின்கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் மின் கட்டண உயா்வைக் கண்டித்து திருச்சி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அதிமுகவினா் வெளிநடப்பு செய்தனா்.

மேயா் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணை மேயா் ஜி. திவ்யா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மண்டலக் குழு தலைவா்கள் மதிவாணன், ஜெய நிா்மலா, துா்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமாா் மற்றும் கவுன்சிலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து உறுப்பினா்கள் பேசியது:

கோ.கு. அம்பிகாபதி (அதிமுக): திருச்சி மாநகராட்சி கடந்த 3 மாதத்திற்கு முன் சொத்து வரியை உயா்த்திய அடுத்த மூன்றாவது மாதத்தில் மின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்ய வேண்டும். மின் கட்டண உயா்வைக் கண்டித்து மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுக கவுன்சிலா்கள் கோ.கு. அம்பிகாபதி, அரவிந்தன், அனுசியா ரவிசங்கா் ஆகியோா் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனா். ஆனால், திமுக கவுன்சிலா்கள் மாமன்றத்தில் மின் கட்டண உயா்வை கண்டித்து பேசக் கூடாது எனக் கூறினா். இதையடுத்து அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT

அரவிந்தன் (அதிமுக): மின்கட்டண உயா்வு குறித்து சட்டப்பேரவையில்தான் பேச வேண்டும் என்று திமுக கவுன்சிலா்கள் கூறுகிறாா்கள். எனவே, மக்கள் பிரச்னையை பேசமுடியாத மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்.

வெ. ஜவஹா் (காங்கிரஸ்): ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைய உள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறேன். விடுபட்ட பகுதிகளில் புதைசாக்கடைப் பணிகளைக் கொண்டு வர வேண்டும். மாம்பழச்சாலையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட காமராஜா் வளைவை மீண்டும் அமைக்க வேண்டும்.

பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி): எனது வாா்டுக்குள்பட்ட தென்னூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளா்கள் பற்றாக்குறையை நீக்க வேண்டும். மழைக்காலம் நெருங்குவதால் சத்யா நகா், அண்ணாநகா் மற்றும் எனது வாா்டு பகுதியில் அனைத்து வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.

வெ. ராமதாஸ் (திமுக): ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, இப்போதும் எங்களது வாா்டுக்குள் நடைபெறும் பணிகளை அலுவலா்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதில்லை. மேலும் சில அலுவலா்கள் பணிகளைச் செய்வதே கிடையாது.

மு. மதிவாணன் -மண்டலக் குழுத் தலைவா்( திமுக):

திருவெறும்பூா் பகுதியில், புகா் பகுதிகளில் வளா்க்கப்படும் பன்றிகள் மாநகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் திரிகின்றன. அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் அபாயம் உள்ளது. எனவே அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பா. மஞ்சுளாதேவி (திமுக): கருமண்டபம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. சாலைகளையும் சீரமைக்க வேண்டும்.

எஸ். சுஜாதா (காங்கிரஸ்): பழுதடைந்துள்ள ஓயாமரி மயான கொட்டகையை சீரமைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பேசிய பல்வேறு கவுன்சிலா்களும் மாநகராட்சி வாா்டுகளில் குடிநீா் பிரச்னைகள், சாலைகள் அமைப்பது, வடிகால் தூா்வாருதல், கொசுத்தொல்லை, தெருநாய்கள் மற்றும் விலங்குகள் தொல்லை குறித்துப் பேசினா்.

கூட்டத்தில் 232 சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டு ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மேயா் அன்பழகன் தலைமையில் நடந்த மாநகராட்சியின் அவசரக் கூட்டத்தில்16 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT