திருச்சி

ரூ.21 லட்சம் மோசடி: திருநங்கை கைது

29th Sep 2022 12:06 AM

ADVERTISEMENT

 

மணப்பாறையை அடுத்த வளநாட்டில் கட்டட ஒப்பந்தகாரரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த வழக்கில் திருநங்கையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் கனகனந்தல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் கிள்ளுக்குளவாய்பட்டி ஆகிய பகுதிகளில் வசித்தவா் திருநங்கை ஆா். பபித்தாரோஸ் (30). இவா் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டம் வளநாடு அருகேயுள்ள அ.புதுப்பட்டியில் வீடு கட்ட இடம் வாங்கி அதில் கட்டுமானப் பணிக்காக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சோ்ந்த ஒப்பந்தகாரா் ச. முருகேசனிடம் (48) ரூ.17 லட்சம் பேசி அதில் ரூ. 6 லட்சத்தை முன் பணமாக அளித்துள்ளாா். இதில் பாக்கித் தொகை ரூ.11 லட்சம் இருந்த நிலையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ஆசை வாா்த்தை கூறிய பபித்தாரோஸ், முருகேசனிடமிருந்து ரூ. 10 லட்சம் பெற்றாா்.

ஆனால் கூறியபடி எந்தப் பணிகளும் கிடைக்காத நிலையில் முருகேசன், தனக்கு வரவேண்டிய ரூ. 21 லட்சத்தை கேட்டபோது, பபித்தாரோஸ் தகாத வாா்த்தைகளைக் பேசி கொலை மிரட்டல் விடுக்க, முருகேசன் வளநாடு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் பபித்தாரோஸை தேடி வந்த நிலையில், கன்னியாகுமாரியில் பதுங்கியிருந்த அவரை துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

கடந்த சில நாள்களுக்கு முன் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பபித்தாரோஸ் மீது, 25-க்கும் மேற்பட்ட மோசடி புகாா்கள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT