திருச்சி

பொன்மலையில் தயாரான உதகை மலைரயில் என்ஜின் வழியனுப்பி வைப்பு

28th Sep 2022 02:07 AM

ADVERTISEMENT

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரான உதகை மலை அதிவேக ரயில் என்ஜின் செவ்வாய்க்கிழமை வழியனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பணிமனையில் தயாரான 66-ஆவது டீசல் என்ஜின் மற்றும் உதகைமலை ரயில் என்ஜினை தெற்கு ரயில்வே பொது மேலாளா் பி.ஜி.மல்யா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பொன்மலை ரயில்வே பணிமனை 100 ஆண்டு வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நிலையில், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. டீசலை கொண்டு இயக்க ப்படும் அதிவேக ரயில் என்ஜின் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கபபட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வருவதற்கு சில காலம் ஆகும். அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் சில ரயில் பெட்டிகளின் தொகுப்புகள் நடப்பு நிதியாண்டில் வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாரத் கெளரவ் திட்டத்தில் ஏற்கெனவே 5 ரயில்கள் இயங்குகின்றன. மேலும் கூடுதலாக ஒரு ரயில் இந்த மாதத்திலும், அக்டோபா், நவம்பா் மாதங்களில் 3 ரயில்களும் இயக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்வில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயந்திரப் பொறியாளா் கெளதம் துட்டா, முதன்மை தலைமைப் பொருள்கள் மேலாளா் பிரகாஷ் சந்த்திரதம்டா, முதன்மை தலைமைப் பணி அலுவலா் கே. ஹரிகிருஷ்ணன், தலைமைப் பொறியாளா் (பொது) கே. ரவிக்குமாா்,

பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை பொதுமேலாளா் ஷியாம்தாா் ராம், துணைப் பொதுமேலாளா் டி.எல். கணேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

உதகை மலை ரயில் என்ஜினின் சிறப்பம்சங்கள் :

நீலகிரி மாவட்டம், உதகை மலைப்பகுதியில் இயக்கப்படும் ரயில் என்ஜின் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை. ஏற்கெனவே 4 ரயில் என்ஜின்கள் இயங்கி வருகின்றன. அவை நிலக்கரியில் இயங்கினாலும் அவற்றை இயக்கத் தொடங்கும் போது உலை எண்ணெய் பயன்பட்டு வந்தது. அப்போது அதிகளவில் புகை எழும்பும்.

இதற்கு மாற்றாக, உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்த ரயில் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல உள்பகுதியிலும் எல்இடி விளக்குகளும் உள்ளன.

ரூ.9.30 கோடி மதிப்பில் இந்த ரயில் என்ஜினை 70 போ் கொண்ட குழுவினா் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கி, 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனா். இந்த ரயில் என்ஜினின் இயக்கத்துக்குப் பிறகு காணப்படும் நிறை, குறைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பொன்மலை ரயில்வே பணிமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT