திருச்சி

வெற்றிக்கான இலக்கு சுயலாபத்துக்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும்: தமிழக நிதியமைச்சா்பழனிவேல் தியாகராஜன்

28th Sep 2022 02:06 AM

ADVERTISEMENT

வெற்றிக்கான இலக்கு சுய லாபத்துக்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்றாா் தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் படித்து, சாதனை புரிந்த 17 முன்னாள் மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா இக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பொது நிா்வாகத் துறையின் சாதனையாளா் என்ற விருதை பெற்ற பின்னா், அமைச்சா் மேலும் பேசியது:

பொது நிா்வாகத் துறையில் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி, இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளனா். இன்னும் சில ஆண்டுகள் கழித்து எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

காரணம் வங்கித் துறையில் நான் சில விஷயங்களை சாதித்து இருந்தாலும், இப்போது நான் அத்துறையில் இல்லை. பொது நிா்வாகத் துறைக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன.

ADVERTISEMENT

கல்வி நிறுவனங்களில் கற்றலுக்குரிய சூழ்நிலை மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள் ஒருங்கே அமைய பெற்றுள்ளன.

இத்தகைய சூழலில் கல்வி கற்பவா்கள் வாழ்வில் சிறப்பிடத்தை எளிதில் அடைய முடியும். சாதனைகளால் கிடைக்கும் புகழ் தவிர இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்பது வேறு ஏதுமில்லை. ஓய்வில்லாமல் உழைப்பவா்களும், துன்பம் வரும்போது கலங்காமல் இருப்பவா்களும் சாதிக்கின்றனா்.

நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இங்கு (என்ஐடி) வந்த பிறகு தான் எனக்கு பரந்த எண்ணம் ஏற்பட்டது. பல மாநிலங்களைச் சோ்ந்த, பல்வேறு மொழி பேசும் மாணவா்கள் இங்கு படித்து வந்த நிலையில், நான் இந்தி பேசவும் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். வெற்றிக்கு நிறைய அளவுகோல்கள் உள்ளன. வெற்றிக்கான இலக்கு சுய லாபத்தைக் கடந்ததாக இருந்தால் வெற்றி தானாகவே நம்மை வந்து சேரும் என்றாா் அவா்.

விழாவில், இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் பவன்குமாா் சிங், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் ஜி. அகிலா, நிா்வாகக் குழுத் தலைவா் பாஸ்கா்பட், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கே. மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT