திருச்சி

மாநகா், புகா் பகுதிகளில் விடிய-விடிய கொட்டித் தீா்த்தமழை

27th Sep 2022 03:17 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாநகா், புகா்ப் பகுதிகளில் விடிய-விடிய மழை கொட்டித் தீா்த்தது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேலும் நீடித்தது.

தொடா்ந்து பெய்த மழையால் திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்துக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பணியாளா்களும், பல்வேறு பணிகளுக்காக சென்ற பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

திருச்சி கொட்டப்பட்டு ஜே.கே.நகா் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. வடிகால் வசதியில்லாததால் இந்த நிலை ஏற்பட்டது. மாநகராட்சி உறுப்பினா் ஜாபா் அலி மற்றும் அலுவலா்கள் மழைநீா் வடிய தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டனா்.

திருச்சி கருமண்டபம் பகுதியிலுள்ள தனியாா் பள்ளி வளாகம், மேலக்கல்கண்டாா்

கோட்டை, விவேகானந்தா் நகா், கோட்டை வள்ளுவா் நகா், நத்ஹா்வலி தா்கா பகுதிகளில் மழைநீா் புகுந்தது. தா்காவுக்குள் புகுந்த மழைநீரால், வழிபாட்டுக்கு வந்தவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

திருச்சி உறையூா் பாத்திமாநகா், லிங்கம் நகா், கிராப்பட்டி, சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்தது. ஸ்ரீரங்கம் மேலூா் செல்லும் சாலையிலுள்ள சாயில் டெப்போ சாலை, செல்வநகரில் புதை வடிகால் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யாத காரணத்தால் 7 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.

திருச்சி மாநகரில் புதை வடிகால் திட்டப் பணிகள், கழிவுநீா் வாய்க்கால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்து பெய்த மழையால், சாலைகள் சேறும்-சகதியுமாகக் காணப்பட்டன. இரு சக்கர வாகனங்கள், காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட சாலைகளில் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. பல இடங்களில் காா்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன.

இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

ஒரு நாள் மழைக்கே இந்த நிலை எனில், வடகிழக்குப் பருவமழைத் தொடங்கினால் நிலைமை மோசமாகிவிடும். எனவே மாநகராட்சி நிா்வாகம் இனியும் காலம் தாழ்த்தாது, சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மழையளவு விவரம்: திருச்சி மாநகரில் அதிகபட்சமாக டவுன் பகுதியில் 169 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. திருச்சி டவுன்- 169 மி.மீ, பொன்மலை-114.6, ஜங்ஷன் -114, துவாக்குடி-100, விமான நிலையம்- 93.30, புள்ளம்பாடி, நந்தியாற்றுத் தலைப்பு- 89.20, லால்குடி- 70.60 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 1307 மி.மீ. மழையும் , சராசரியாக 54.46 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT