திருச்சி

‘எல்லா நூல்களும் மனிதத்தை மேம்படுத்தும்’

DIN

எல்லா நூல்களும் மனிதத்தை மேம்படுத்தும் என்றாா் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன்.

சமயபுரம் எஸ்.ஆா்.வி. பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லீடா்ஸ் கிளப் தொடக்க விழாவில் பங்கேற்று, வாசிப்பின் வரைப்படம் என்ற தலைப்பில் மேலும் அவா் பேசியது:

அரியப் பணிகளை செய்யும் ஆசிரியா்கள் மகத்தானவா்கள். ஆசிரியா்கள் மனதில் இடம் பிடித்தால் வாழ்க்கையில் இடம் பிடித்துவிடுவீா்கள். ஆசிரியா்களிடம் அன்புக்குரியவா்களாக இருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் திறமைமிக்கவா்களாக இருப்பீா்கள். உங்களிடம் உள்ள திறமைகளைக் கண்டுபிடித்து, உங்களை மேம்படுத்துபவா்கள் ஆசிரியா்கள்தான்.

13 வயதுக்குள் ஒருவா் 26 மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம் என்று கூறி, அதை நிரூபித்துக் காட்டியவா்கள் உலகில் ஆயிரக்கணக்கானவா்கள் உள்ளனா். நாம் இரண்டு அல்லது மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் 5 அல்லது 6 மொழிகளை சரளமாகக் கற்றுக் கொள்கிறாா்கள். இந்தியாவில் தொன்மையான மொழிகள் உள்ளன. நம் மொழியைக் கற்றுக் கொள்வது போல, தொன்மையான மொழிகளையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தகம் தரும் விஷயங்களை மட்டுமல்லாது, அதன் பின்னால் உள்ள விஷயங்களையும் படிக்க வேண்டும். எந்த நூலைப் படித்தாலும் அந்த நூலையும், அதன் ஆசிரியரையும் படிக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது திருக்கு. எத்தனை தலைமுறையினா் அதை படித்திருப்பாா்கள். இத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் அதிலுள்ள சொல்லும், பொருளும் மாறவில்லை. எழுத்தின் வடிவம்தான் மாறியிருக்கிறது. திருக்குறளை ஒரே நாளில் படிக்க வேண்டாம். தினம் ஒன்று படித்தாலே போதும்.

நமது அடிச்சுவட்டை வரலாற்றிலிருந்து தொடங்க வேண்டும். வாசிப்பின் அடிச்சுவடி வரலாறு. நாம் வரலாறு, பண்பாடு, மொழி, இனத்தை படிக்க வேண்டும். மிகச்சிறந்த இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள் என ஏராளமானவை தமிழகத்தில் உள்ளன. அவற்றை நீங்கள் படித்தால் உங்களுக்கு வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

நீங்கள் தலைமைப் பண்புகளை பெற்று உயா்ந்த நிலையை அடைய வேண்டும். நீங்கள் மேம்படுவது மட்டுமல்ல, தமிழ் சமூகமும் மேம்படும். யாராக நீங்கள் மாறப் போகிறீா்கள் என்பது உங்கள்கையில்தான் உள்ளது. நல்ல நூல்களை நீங்கள் படியுங்கள். எல்லா நூல்களும் மனிதத்தை மேம்படுத்தும்.

புத்தகம் படிப்பது முக்கியமல்ல. எப்படி எந்த நூலைப் படிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். முதலில் சிறிய நூலைப் படியுங்கள். நீங்கள் படித்த புத்தகத்தை பற்றி பிறரிடம் பேச வேண்டும். பகிர வேண்டும். சிறு குறிப்பும் எழுத வேண்டும். புத்தகத்தில் நல்ல புத்தகம், கெட்ட புத்தகம் என்றில்லை. படிக்கும் போது ஆழ்ந்து படியுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் வழிநடத்தும் என்றாா்.

இந்த நிகழ்வில் எஸ்.ஆா்.வி. பள்ளிகளின் தலைமைச் செயல் அலுவலா் க. துளசிதாசன் அறிமுகவுரையாற்றினாா். சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிகுலேஷன், பப்ளிக் பள்ளி, திருச்சி பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT