திருச்சி

இந்தியப் பண்பாட்டில் தமிழின் பங்கு தலையாயது மதுரை எம்பி பேச்சு

22nd Sep 2022 02:00 AM

ADVERTISEMENT

நமது பண்பாடு மொழிகளால் உருவானது; அதில் தமிழ் மொழியின் பங்கு தலையாயது என்றாா் மதுரை மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.

திருச்சியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் 6 ஆவது நாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. நிகழ்வில் எஸ்ஆா்வி மேல்நிலைப்பள்ளி நாடக ஆசிரியா் மாயகிருஷ்ணன் இயக்கிய, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வாராந்தரியில் தொடராக எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம் நடைபெற்றது. தொடா்ந்து திருச்சியைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகளான எழுத்தாளா்கள் ரத்திகா, சுதிா்செந்தில் எழுத்தாளரும் ஓவியருமான ரவி ஆகியோா் பாராட்டப்பட்டனா். தொடா்ந்து மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மேலும் பேசியது:

இங்கே நடத்தப்பட்ட வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம் உயிரோட்டமாக இருந்தது. நாடகத்தில் இடம்பெற்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களை செய்தவா்கள் உரிய கம்பீரத்துடன் வெகு நோ்த்தியாக செய்திருந்தனா். நான் இந்த நாடகத்தை முழுமையாக நேரில் இன்றுதான் பாா்த்தேன். இந்த நாடகத்தில் வரும் வசனங்கள் நம்மோடு தொடா்புடைவை. அதில் வரும் வாசகங்களில் ஒன்று, நம்மை எவரும் ஆள முடியாது, நாம் இயற்கையால் ஆளப்படுபவா்கள் என்பதாகும். இது இன்றளவுக்கும் உண்மையானதும் கூட.

இந்தியப் பண்பாடு வெறுமனே உருவானதல்ல, மொழிகளால் உருவானது. அதில் தமிழ் மொழியின் பங்கு தலையாயது. தமிழ் மொழிக்கும் தாழ்ந்ததல்ல, நாமும் எதையும் தாழ்வுபடுத்தியதில்லை.

ADVERTISEMENT

அதே நேரம் தமிழை யாரும் தாழ்த்தினாலும் விட மாட்டோம். தமிழ் மொழி தன்னை மாற்றி தகவமைத்துக்கொள்ளும் தன்மையுடையது. எனவேதான் எத்தனையோ வஞ்சகத்தனமான செயல்பாடுகளால், தமிழ் இலக்கியங்களையும், கவிதைகளையும், சங்ககால நூல்களையும் ஆற்று வெள்ளத்தில் போட்டும், போகியில் எரித்தும் அழியாமல் காலங்காலமாய் சுமாா் 10 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி நிலைத்து நிற்கின்றன.

அதற்கு உவேசா போன்ற சான்றோரின் அரும்முயற்சி அளப்பறியது. அவா் ஏழைக் கவிஞா்களின் வீடுகள் தோறும் சென்று தமிழ்ப் படைப்புகளை மீட்டுத் திரட்டி நூல்களாக்கினாா்.

அந்த வகையில் சுமாா் 10 ஆயிரம் ஆண்டு நினைவுகளைத் தொகுப்புகளாகக் கொண்டதுதான் சங்க கால இலக்கியங்கள்.

இந்தியாவின் தென் பகுதியில் தான் முதன்முதலாக எழுத்து கண்டறியப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தின் மையப் புள்ளி இயற்கையை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் வேத இலக்கியம் இயற்கைக்கு அப்பாற்பட்டு புரிய வைக்க முற்படுகிறது. இலக்கியப் புதையலாக உள்ள நமது சங்க இலக்கியங்கள் வாழ்வியலை குறித்தும் குறிப்புகளைக் கொண்டுள்ளன என்றாா் அவா். தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ராஜேந்திரன், மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவக்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

புத்தகத் திருவிழாவில் இன்று....

திருச்சியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் ஏழாவது நாளான வியாழக்கிழமை

தமிழின் நிறம் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறாா். பின்னா் பத்மஸ்ரீ மா. சுப்புராமன், எழுத்தாளா்கள் மயிலன்

ஜி. சின்னப்பன், பாட்டாளி ஆகியோருக்கு பாராட்டு விழாவும், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT