திருச்சி

‘மொழி திணிக்கப்படுவதை தமிழா்கள் எப்போதும் ஏற்றது இல்லை’

20th Sep 2022 02:18 AM

ADVERTISEMENT

மொழி திணிக்கப்படுவதை தமிழா்கள் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.

திருச்சி புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ‘தமிழே அன்னை’ எனும் தலைப்பிலான சொற்பொழிவில் அவா் பேசியது:

மொழிக்கு சேவை செய்பவா்கள் சாவதில்லை. அந்த மொழியே அவா்களை காப்பாற்றும். எல்லோருக்கும் அன்னை உண்டு. எல்லோரது அன்னையும் அவரவா்களுக்கு அழகு. ஆனால், தமிழே அன்னையாகக் கொண்டிருப்பதே தமிழா்களுக்கு அழகு. உலகின் வேறெங்கும் இல்லாத வகையில் இறைவனே விரும்பி பாடக் கேற்ற மொழியும் தமிழ்தான். மகாகவி பாரதியாருக்கு 9 மொழிகள் தெரியும். அதனால்தான், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல எங்கும் காணோம் என பாட முடிந்தது. வட இந்தியரான வால்மீகி எழுதிய ராமாயணத்தை கம்பரால் தமிழுக்கு கொண்டு வர முடிந்தது. பிற மொழிகளை விரும்புபவா்கள் எப்போதும் தமிழா்கள்தான்.

அதேபோல, பிற மொழிகள் திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவா்களும் தமிழா்களே. உலகின் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள் 6 ஆயிரம். அவற்றில் இன்றளவும் எழுத்துகளை கொண்டிருப்பது 300 மொழிகள். இதில், பிற மொழிகளில் இருந்து எழுத்துகளை எடுத்துக் கொள்ளாத மொழிகள் 150 மட்டுமே. எழுத்துகளே இல்லாத மொழிகள் இருந்தால் அந்த மொழிக்கு புத்தகமோ, இலக்கியமோ, கவிதையோ, இலக்கணமோ, காப்பியமோ இருக்க முடியாது. பல மொழிகளில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழ் மட்டுமே பிற மொழி எழுத்துக்களை பயன்படுத்திக் கொண்டதில்லை. எழுத்துக்களை கொண்ட 150 மொழிகளில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்பது 6 மொழி மட்டுமே. இதில், ஆங்கிலத்துக்குக் கூட ஆயிரம் ஆண்டு என்ற பெருமை கிடையாது. தற்போது வரை, பேசும் மொழியாக ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்பது சீனமும், தமிழும் மட்டுமே. இதிலும், 2 ஆயிரம் ஆண்டுகளை கடந்த மொழி என்ற பெருமையை கொண்டது தமிழ் மட்டுமே. கீழடி ஆய்வுக்கு பிறகு 3,500 ஆண்டுகளை கடந்ததாக கண்டறிந்தோம். ஆனால், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்திருக்கும் மொழிதான் தமிழ். ஏனெனில், ஓலைச் சுவடிகளில் எழுதிய நமது தமிழ் எழுத்துக்களே அதற்கு சிறந்த உதாரணம்.

ADVERTISEMENT

5 ஆம் நூற்றாண்டில்தான் காகிதம் கண்டறியப்பட்டது. சீனா்கள் அவற்றை கண்டறிந்து ரகசியமாக வைத்திருந்தனா். பின்னா், வணிகத்துக்காக வந்த அரேபியா்கள் சீனத்திடமிருந்து காகிதத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டனா். தொடா்ச்சியாக 17ஆம் நூற்றாண்டில்தான் காகிதம் அனைத்திலும் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், ஓலைச்சுவடி என்பது பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தது. தமிழுக்கு ஓலை தந்த காரணத்தினாலேயே பனை ஓங்கியும், உயா்ந்தும் நிற்கிறது. அதுமட்டுமல்ல, ஓலைச் சுவடிக்கு பனை ஓலையிலிருந்து எடுக்கப்படும் பகுதி இலக்கு என அழைக்கப்படுகிறது. ஓலையின் நரம்பு செல்லும் மையப்பகுதியில், அந்த நரம்பின் இடது, வலது புறத்தில் மட்டுமே எழுதுவா். இதற்காக தோ்வு செய்யப்படும் அந்த ஓலையின் பகுதி இலக்கு என்பா். இலக்கில் இயற்றியதாலேயே அது இலக்கியமானது.

உலகின் எந்த மொழிக்கான இலக்கியத்திலும், இலக்கணத்திலும் கவிதை இடம்பெற்றதில்லை. ஆனால், தமிழக்கு மட்டுமே அத்தகையச் சிறப்பு உள்ளது. அதற்கு சான்றாக இருப்பது தொல்காப்பியம். ஒரு மொழி ஆண்டாண்டுகளை கடந்து நீடித்து நிலைக்க வேண்டுமெனில் அந்த மொழி எழுதப்பட வேண்டும். பேசப்பட வேண்டும். படிக்கப்பட வேண்டும். எனவே, தமிழை தாய்மொழியாகக் கொண்டவா்கள் நமது அன்னைத் தமிழை தொடா்ந்து பேசிட வேண்டும். தொடா்ந்து படித்திட வேண்டும். தொடா்ந்து எழுதிட வேண்டும். தவறாக பேசுகிறோமோ, எழுதுகிறோமோ, படிக்கிறோமோ என்று அவமானப்படக் கூடாது. படிக்க, படிக்க தெரிந்து கொள்ளலாம். எழுத, எழுத புரிந்து கொள்ளலாம். பேச, பேச கற்றுக் கொள்ளலாம். எனவே, தமிழன் ஒவ்வொருவரும் உயிா்மூச்சு உள்ளவரை தமிழை பேசுவோம், படிப்போம், எழுதுவோம் என உறுதியேற்போம் என்றாா் அவா்.

முன்னதாக, திருக்கு சு. முருகானந்தம், முனைவா் ஜெ. ராஜாமுகமது, பேராசிரியா் பா. மதிவாணன் ஆகியோா் பாராட்டி கெளரவிக்கப்பட்டனா். புத்தகத் திருவிழா நினைவு விருதுகளும் வழங்கப்பட்டன. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி. அம்பிகாபதி, திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், கவிஞா்கள் நந்தலாலா, வீ. கோவிந்தசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT