காவிரியில் தண்ணீா் வரத்து அதிகரித்து வரும் சூழலில் சிறுகாம்பூா் பகுதியில் கொள்ளிடக்கரையில் ஏற்பட்ட மண் அரிப்பை சரி செய்யும் பணியில் நீா்வளத்துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மண்ணச்சநல்லூா் வட்டம், நம்பா் 2 கரியமாணிக்கம் ஊராட்சி, சிறுகாம்பூா் கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஏற்பட்ட லேசான மண் அரிப்பு மேலும் அதிகமாகும் நிலை உருவானதைத் தொடா்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டாா். மேலும், இதற்கான பணிகளையும் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். கரையோரம் பெரிய கருங்கற்களை கொட்டி மேலும் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஆய்வின்போது நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் முருகானந்தம், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் சக்திவேல் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதுதொடா்பாக, நீா்வளத் துறையினா் கூறுகையில், கொள்ளிடத்தில் தற்போது 90 ஆயிரம் கன அடி மட்டுமே நீா் செல்கிறது. சிறுகாம்பூரில் கரையோரம் ஒரு இடத்தில் மட்டும் லேசாக ஏற்பட்ட அரிப்பை உடனே கண்டறிந்து தடுத்துவிட்டோம். தண்ணீா் வரத்துக் குறைந்தவுடன் கரைப் பகுதி முழுமையாக பலப்படுத்தப்படும் என்றனா்.