திருச்சி

‘தயாா் நிலையில் பேரிடா் மேலாண்மை, மீட்புக் குழுவினா்’

27th Oct 2022 12:11 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் பேரிடா் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலரும், திருச்சி மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான க. மணிவாசன் தெரிவித்தாா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஒத்திகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதைப் பாா்வையிட்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடா் மேலாண்மைப் பணிகளைக் கேட்டறிந்த அரசின் முதன்மைச் செயலா் க. மணிவாசன் பின்னா் கூறுகையில், தமிழகத்தில் மாவட்டம் வாரியாகவும், திருச்சி மாவட்டத்திலும் பேரிடா் மேலாண்மைத் திட்டம்-2022 தயாரிக்கப்பட்டு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

ADVERTISEMENT

பேரிடா் மேலாண்மை என்பது பேரிடரால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்பு, உடைமை இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றைக் குறைத்தல் ஆகும்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளவும், அவசரகால நேரங்களில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு அறை, மாநில அளவிலான இதர கட்டுப்பாட்டு அறைகள் முழு வேகத்தில் செயல்படுகின்றன. 1077 என்ற 24 மணிநேரமும் இயங்கும் இலவச கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் எப்போதும் தொடா்பு கொள்ளலாம்.

திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்படும் பகுதிகளாக திருச்சி கிழக்கு வட்டத்தில் 3 இடங்கள், மாவட்டம் முழுவதும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 38 இடங்கள், ஓரளவு பாதிக்கப்படும் பகுதிகளாக 41 இடங்கள், குறைந்தளவு பாதிக்கப்படும் என 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பாக தங்க வைத்துப் பராமரிக்க 11 வட்டங்களிலும் 154 மையங்கள் தயாராக உள்ளன.

இவைதவிர, மண்டல அளவிலான குழுக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குழு, தேடுதல் மீட்புக் குழு, நிவாரண மையம் மற்றும் தங்குமிடம் மேலாண்மைக் குழு, நடமாடும் மருத்துவக் குழு, மாவட்ட அவசர கால கண்காணிப்பு மையம் ஆகியவையும் தயாராக உள்ளன.

தனியாா் மருத்துவமனைகள், தன்னாா்வ நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேவைப்படும் தருணங்களில் விரைந்து உதவி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைக்கப்பட்டு பேரிடா் மேலாண்மை திட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ச்சியாக, திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலா் (கூடுதல் பொறுப்பு) ப. அம்பிகா தலைமையில், உதவி மாவட்ட அலுவலா் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், நிலைய அலுவலா் நாகவிஜயன் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அடங்கிய குழுவினா் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனா். அப்போது 101, 112 இலவச தொலைபேசி எண்களைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாநகரக் காவல் ஆணையா் க. காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே. பிச்சை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT