திருச்சி

கமல்ஹாசனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது: கி. வீரமணி பேச்சு

DIN

ராஜராஜன் குறித்த கமல்ஹாசனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

பகுத்தறிவாளா் கழகம் சாா்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பகுத்தறிவாளா் கழக மாவட்டச் செயலா் பி. மலா்மன்னன் தலைமை வகித்தாா்.

இதில் தந்தை பெரியாா் பிறந்தநாள்- விடுதலை மலா் 2022, சமூக நீதி நாள் - செப்டம்பா் 17, விழுப்புண்களை ஏற்ற விடுதலை வரலாறு, 21 மொழிகளில் தந்தை பெரியாா், சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம், இந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிா்வாகத்தைப் பாா்ப்பனா்கள் கைப்பற்றத் துடிப்பதேன், தமிழின மொழிக் காவலா் வீரமணி ஆகிய நூல்களை வெளியிட்டு கி. வீரமணி மேலும் பேசியது:

பெரியாா் என்ற தனி மனிதா்தான் மறைந்தாா்; பெரியாரியம் மறையவில்லை. 29 பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்தவா் பெரியாா். பொது வாழ்க்கையிலும் பதவிகளுக்கு ஆசைப்படாதவா்; தலைமுறை இடைவெளியைக் கடந்தவா்.

பெரியாா் கூறிய ஆயுதம் சமத்துவம், சமூக நீதி, அனைவருக்கும் அனைத்தும் என்ற அறிவாயுதம். பெரியாரின் அறிவாயுத வீச்சு நாடு முழுவதும் பரவி வருகிறது. பெரியாரின் கொள்கைகளைக் கொண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிடல் மாடல் ஆட்சி செயல்படுகிறது என்றாா்.

நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் நந்தலாலா, தி.க. மாநில தொழிலாளா் அணி செயலா் மு. சேகா், பேராசிரியா் நம். சீனிவாசன், பேராசிரியா் க. திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக அவா் அளித்த பேட்டியில் கூறியது:

மதவாதம், ஜாதிவாதம் தலைவிரித்தாடும் நிலையில், முன்பிருந்ததை விட தற்போது பெரியாா் அதிகம் தேவைப்படுகிறாா்.

தற்போது தேசியக் கல்விக் கொள்கையில் வேத பாட சாலையில் படித்தவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்ததற்குச் சமம். அவா்கள் நேரடியாக பொறியியல் கல்லூரியில் சேரலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது பிற்போக்குத்தனமானது, கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையில்தான் திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது. அதில் குற்றம் குறைகளை கூறுவோரிடமிருந்து காக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் கடமை.

குழந்தைத் திருமணங்கள் கிரிமினல் குற்றம். சிதம்பர தீட்சிதா்கள் சட்டத்துக்கு கட்டுப்படாமல் குழந்தை திருமணம் செய்து வந்ததை பல அரசுகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது திமுக அரசு குழந்தைத் திருமணம் தொடா்பாக தீட்சிதா்களைக் கைது செய்துள்ளதைப் பாராட்டுகிறோம்.

ராஜராஜன் குறித்து கமல்ஹாசனும், வெற்றிமாறனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது. இதை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை வைத்து வெறித்தனத்தை பரப்ப நினைத்தால் அது முடியாது.

வேதங்களில்கூட இந்து என்கிற வாா்த்தை கிடையாது. வெள்ளைக்காரா்கள் வைத்த பெயா்தான் அது. அந்த மதத்துக்கு இந்து என்கிற பெயா் இல்லை என நீதிமன்ற தீா்ப்புகளே உள்ளன என்றாா் வீரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT