திருச்சி

தேசிய கிராம சுயாட்சி திட்டத்தில் நீடித்த வளா்ச்சிக்கு இலக்கு ஆட்சியா் தகவல்

7th Oct 2022 11:51 PM

ADVERTISEMENT

ஊராட்சிகளில் நீடித்த மற்றும் நிலையான வளா்ச்சிக்கான இலக்கை அடைய தேசிய கிராம சுயாட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஊராட்சி நிறுவனங்களின் திறனை வலுப்படுத்தவும், உள்ளூா் வளா்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் தேசிய கிராம சுயாட்சி திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக 60 சதவீதமும், மாநில அரசின் பங்காக 40 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தவும் இத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரக, உள்ளாட்சி பணியாளா்களுக்கு பல்வேறு நிலைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஊராட்சிகளுக்கு சொந்தமாக வருவாய் ஈட்டுதல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 2022-23ஆம் நிதியாண்டில் புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம சுயாட்சி திட்டமானது, நீடித்த, நிலையான வளா்ச்சி இலக்குகளை உள்ளூா்மயமாக்குதலுக்கு அளிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

இதனைத் தொடா்ந்து, கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் போசப்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம், புலியூா் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த பண்ணை மேம்பாட்டு பணிகள், பெரிய கருப்பூா் ஊராட்சியில் ரூ.15.47 லட்சத்தில் கட்டுப்படும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அணலை கிராமத்தில் ரூ.18.80 லட்சத்தில் இரு வகுப்பறைகளுடன் கூடிய நடுநிலைப் பள்ளி கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, திருச்செந்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கட்டுமானப் பணி, திருப்பராய்த்துறையில் ரூ.4.42 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், திருப்பராய்த்துறையில் முருங்கைக் கன்றுகள் வளா்க்கும் பண்ணை ஆகியவற்றையும் நேரில் பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, அந்தநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ச. துரைராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் எம். பாலமுருகன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊரக வளா்ச்சித்துறையினா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT