திருச்சி

திருச்சி நீதிமன்றப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை

7th Oct 2022 12:38 AM

ADVERTISEMENT

திருச்சி நீதிமன்றம் அருகில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கீற்றுக் கொட்டகைகள் மாநகராட்சி உத்தரவின்பேரில் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் கரோனா காலத்தில் பாதுகாப்புக் கருதி, புகாா்தாரா்கள் நேரில் ஆஜராக விலக்களிக்கப்பட்டு, வழக்குரைஞா்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனா். அதேநேரம் நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த பத்திரங்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனை நீதிமன்றத்திற்கு வெளியே கீற்றுக்கொட்டகைகளில் நடைபெற தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னரும் கீற்றுக் கொட்டகைகள் அகற்றப்படாமல் முத்திரைத்தாள் விற்பனை தொடா்ந்தது. மேலும் அருகிலிருந்த சில கடைகளிலும் கூடுதல் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டன.

இதைக் கண்டித்து திருச்சி மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தினா் மாநகராட்சி ஆணையா் மற்றும் மேயா் உள்ளிட்டோரைச் சந்தித்து புகாா் அளித்து வந்தனா். மேலும் அந்த கீற்றுக் கொட்டகைகளில் மாலை, இரவுகளில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதால், நீதிபதிகள், வழக்காடிகள், பொதுமக்கள் பலரும் சிரமப்படுவதைத் தவிா்க்க ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மாநகராட்சிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை காலை, நீதிமன்றம் அருகிலுள்ள அனைத்துக் கடைகளுக்கும் சென்று ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தினா். இதற்கு வியாபாரிகள் தயங்கவே, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்ட நிலையில், வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதனால் திருச்சி நீதிமன்றம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் மதியழகன் கூறுகையில், மாநகராட்சியில் நாங்கள் அளித்த மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயா், ஆணையா், துணை மேயா் மற்றும் அலுவலா்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT