திருச்சி

சிறுகனூரில் தொடரும் விபத்துகள் தரைப்பாலம் அமைக்க 8 கிராம மக்கள் எதிா்பாா்ப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தொடா் நிகழும் விபத்து, உயிரிழப்புகளை தவிா்க்கவும் சிறுகனூரில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த 8 கிராம மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது சிறுகனூா் ஊராட்சி. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊராட்சிக்கான பழைய பேருந்து நிறுத்தம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் சிறுகனூா் அருகில் உள்ள ரெட்டிமாங்குடி, கொளக்குடி, பெருவளப்பூா் ஆகிய கிராமங்களும், மேற்கு பகுதியில் சி.ஆா். பாளையம், திருப்பட்டூா், எம்.ஆா்பாளையம், சனமங்கலம், வாழையூா் ஆகிய கிராமங்களும் உள்ளன. இந்த 8 கிராமங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், தனியாா் பணியாளா்கள், விவசாயிகள் தினந்தோறும் தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல சிறுகனூா் ஊராட்சி பழைய பேருந்துநிலையப்பகுதிக்கு வரவேண்டியுள்ளது.

ஏனெனில், இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்துதான் பெரம்பலூா், உளுந்தூா்பேட்டை, விழுப்புரம், சென்னை மாா்க்கமாகவும், சமயபுரம், நெ. 1 டோல்கேட், திருவானைக்கா, ஸ்ரீரங்கம், திருச்சி மாா்க்கமாகவும் செல்ல வேண்டியுள்ளது.

இவை தவிர, சிறுகனூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி, பாரதி மான்ய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், முழுநேர நியாய விலைக் கடை, கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு துணை சுகாதார நிலையம், அஞ்சல் நிலையம், கால்நடை மருந்தகம், காவல்நிலையம் ஆகிய அலுவலகங்கள் தேசிய நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் உள்ளன. எல்.இ.எல்.சி. ஆரம்பப் பள்ளி, சமுதாய கூடம், பகுதி நேர நியாய விலைக்கடை, கிராம சேவை மையம், வங்கி, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவை கிழக்குப் பகுதியில் உள்ளன.

ADVERTISEMENT

இந்த அலுவலகங்களுக்கும், இதர இடங்களுக்கும் வந்து செல்ல சிறுகனூா் பழைய பேருந்து நிறுத்தப்பகுதியை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்வதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என சிறுகனூா் கிராம மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, சிறுகனூா் ஊராட்சி மன்றத் தலைவா் இந்திராணி கண்ணையன் கூறுகையில், சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் முன்பு தேசிய நெடுஞ்சாலை 45ஆகவும் தற்போது, தேசிய நெடுஞ்சாலை 38 ஆகவுள்ள சாலையில் சிறுகனூா் பழைய பேருந்து நிறுத்தம் உள்ளது. தச்சங்குறிச்சி பிரிவு சாலையில் ரூ.24 கோடியில் அமைக்கப்படும் மேம்பாலம் எங்களது பகுதிக்கோ, சுற்று கிராமங்களுக்கோ பெரிதும் பயன்தராது. அந்த பாலப்பகுதிக்கு செல்லவே ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவு ஆகும். ஒவ்வொரு முறையும் 3 கி.மீ. தொலைவுக்கு சென்றுவர இயலாது. எனவே, வழக்கம்போல தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை எதிா்கொண்டே மக்கள் கடந்து செல்கின்றனா். விபத்தில் உயிரிழப்புகளும் தவிா்க்க முடியாமல் உள்ளது. எனவே, சிறுகனூா் பழைய பேருந்து நிறுத்தப் பகுதியில் சுரங்கப் பாதையில் செல்லும் வகையில் தரைப்பாலமோ, பாதசாரிகள் மட்டும் நடந்து செல்லும் வகையிலான தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT