திருச்சி

ரூ. 70 லட்சத்துக்கு கதா் விற்பனை இலக்கு

3rd Oct 2022 01:59 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டத்தில், 2022-23ஆம் ஆண்டுக்கு ரூ.70 லட்சத்துக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையம் எதிரேயுள்ள கதா் விற்பனை அங்காடியில் மகாத்மா காந்தி படத்திற்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி, தீபாவளி கதா் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.

பின்னா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் கூறியது:

ADVERTISEMENT

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில்கள் வாரியத்தின் மூலம் திருச்சி மாவட்டம், கருங்குளம் கிராமத்தில் செயல்படும் கிராமிய நூற்பு மையத்தில் 75 மகளிருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. சமயபுரத்தில் சோப்பு உற்பத்தி அலகு செயல்படுகிறது.

திருச்சி மாவட்டத்துக்கு கடந்தாண்டு கதா் விற்பனைக்கு ரூ.62 லட்சம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, இதுவரை ரூ. 50.55 லட்சம் விற்பனை எய்தப்பட்டுள்ளது. கிராமப் பொருள்கள் விற்பனை மூலம் ரூ. 115 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு கதா் விற்பனைக்கு ரூ. 70 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கதா் ஆடைகள், படுக்கை விரிப்புகள், மெத்தை, தலையணைகள், பட்டு ரகங்கள், பாலிவஸ்திர ரகங்களுக்கு 30 சதமும், உல்லன் ரகங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவியால் 20 சத சிறப்புத் தள்ளுபடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வுகளில் நகரப் பொறியாளா் சிவபாதம், செய்தி- மக்கள் தொடா்புத் துறை உதவி இயக்குநா் த. செந்தில்குமாா், கதா் கிராமத் தொழில்கள் மண்டல துணை இயக்குநா் கோ. பாலகுமரன், உதவி இயக்குநா் தி. கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT