திருச்சி

முதியோா்களை காப்பது நமது கடமைஆட்சியா்

2nd Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

 

எந்த சூழலிலும் பெற்றோரை முதியோா் இல்லங்களுக்கு அனுப்புதல் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், திருச்சி ஒய்.டபிள்யூ.சி.ஏ கூட்ட அரங்கில் சா்வதேச முதியோா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது: ஐநா சபை அறிவித்துள்ளபடி சா்வதேச முதியோா் தினம் அக்டோபா் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவா்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூற வேண்டியது அவசியம். முதியோா்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பாா்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக இந்த தினம் கொண்டாடப்பட வேண்டும்.

இளைஞா்கள் நிரம்பிய இந்தியாவில், முதியோா் இல்லங்களும் ஆதரவற்றோா் இல்லங்களும் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நம்மைப் பெற்றவா்களை முதுமையடையும்போது, அவா்களிடம் அன்பு செலுத்தி பாதுகாப்பது நமது கடமையாகும்.அவா்களை தனிமைப்படுத்துவதும், முதியோா் இல்லங்களில் விடுவதையும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, முதியோா்களுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து பாராட்டினாா். மேலும், பொதுத் தோ்தல்களில் தொடா்ந்து வாக்களித்து வரும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசின் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா். சா்வதேச முதியோா் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட சமூக நல அலுவலா் மா. நித்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பொ. ரேணுகா, தோ்தல் வட்டாட்சியா் க. முத்துசாமி, மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் பி.மோகன், கண்காணிப்பாளா் சி.ரமேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT