திருச்சி

திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக அதிகரிக்கும்

2nd Oct 2022 12:25 AM

ADVERTISEMENT

 

தொடா் மழை காரணமாகவும், மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கப்படுவதாலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக ஆக அதிகரிக்கும் என எதிா்பாக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் அன்பில், நகா், கல்லிக்குடி, மாந்துரை, அபிஷேகபுரம், கூகூா், திண்ணியம், முள்ளால், செம்பரை, காட்டூா், பூவாளூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் மண்ணச்சநல்லூா் (நொச்சியம்), கிளியநல்லூா், எதுமலை, மணிகண்டம் வட்டத்தில் நவலூா்குட்டப்பட்டு, பூங்குடி, மணிகண்டம், திருவெறும்பூா் வட்டத்தில் வேங்கூா், கீழகல்கண்டாா்கோட்டை, முசிறி வட்டத்தில் அய்யம்பாளையம், குணசீலம், புத்தனாம்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தூா், தொட்டிய, உப்பிலியபுரம் வட்டத்தில் எரகுடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

நாற்றுகள் விடுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

ADVERTISEMENT

இருப்பினும், இந்தாண்டு நல்ல மழை பெய்து வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது தொடா்ந்து வருவதாலும் சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 45 ஆயிரம் ஹெக்டோ் என்ற நிலையிலிருந்து 50 ஆயிரம் ஹெக்டோ் வரையில் சம்பா சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறையினா் தெரிவிக்கின்றனா்.

லால்குடியில் குறுவை அறுவடை நடந்து வருவதால், வரும் வாரங்களில் சம்பா தொடங்கும், இது தாளடி சம்பா (குறுவையைத் தொடா்ந்து நடைபெறும் சம்பா) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பருவமாக இருப்பதால், விவசாயிகள் தயாராகி விதைகளை விதைக்கத் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து, வேளாண்மைத்துறை இணை இயக்குநா் முருகேசன் சனிக்கிழமை கூறுகையில், மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு சம்பாவுக்கும் தொடா்ந்து தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் பரவலாக பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் மூலம் 20 கிலோ சான்றளிக்கப்பட்ட விதைகளை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறோம். திருச்சி-3, கோ.ஆா்-50, டிகேஎம்13, விஜிடி1 ஆகிய நெல் ரகங்கள், உயிா் உரங்கள் வழங்கப்படுவதுடன், விதை நோ்த்தி செய்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு 440 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போதுவரை 50 சதவீத விதைகள் பல்வேறு மானியத் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து விவசாயிகளின் தேவையறிந்து அவற்றை பூா்த்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT