திருச்சி

வாா்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கூடாது, மாநகராட்சி மாமன்றகூட்டத்தில் வலியுறுத்தல்

30th Nov 2022 01:22 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கூடாது என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் இரா. வைத்திநாதன், துணைமேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

என். பிரபாகரன் (விடுதலைச் சிறுத்தைகள்): ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த தமிழக ஆளுநருக்கு எதிரான கண்டனத் தீா்மானத்தையும், தடை சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தும் தீா்மானத்தையும் குடியரசுத் தலைவருக்கு மாமன்றம் அனுப்ப வேண்டும். (இதற்கு மேயா் உள்பட அனைத்து உறுப்பினா்களும் மேஜையை தட்டி ஆதரவு அளித்தனா்).

எஸ். சுரேஷ் (மாா்க்சிஸ்ட்): மாநகருக்குள் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத் துறைக்குப் பதிலாக மாநகராட்சி நிா்வாகம் தூய்மைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? தேசிய நெடுஞ்சாலைகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது 2 முறை விபத்து ஏற்பட்டு மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் காயமடைந்துள்ளனா். இதுபோல் நடைபெறாமல் தடுக்க வேண்டும். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையே தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேயா் அன்பழகன்: மாநகரின் தூய்மைப் பணி என்பது கூட்டுப் பொறுப்பு என்பதாலும், முதல்வா் வருகையாலும் மாநகராட்சி மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சி மாநகராட்சி பகுதி நெடுஞ்சாலைகளை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கே. அம்பிகாபதி (அதிமுக): சுமாா் 180 ஏக்கரிலான செம்பட்டு பெரிய குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றி, சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் வரி வசூலிப்பதைப் போன்று, வளா்ச்சிப் பணிகளுக்கான நிதிப் பங்கீட்டையும் சரிசமமாக வழங்க வேண்டும்.

மேயா்: மாநகராட்சிப் பகுதிகளில் பாசனப் பயன்பாடின்றி உள்ள அனைத்து குளங்களையும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் எடுத்துச் சீரமைக்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக கொட்டப்பட்டு குளத்தில் விரைவில் ரூ.1 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்தடுத்து அனைத்து குளங்களும் சீரமைக்கப்படும்.

க. சுரேஷ் (இந்திய கம்யூ): புதை சாக்கடைப் பணிகளுக்காக அமைக்கப்படும் ஆள்நுழைவுக் குழிகள் கனரக வாகனங்கள் சென்றால் சேதமடைந்துவிடும் வகையில் தரமற்றவையாக உள்ளன. நீண்டகாலத் திட்டம் என்பதால் தரத்தை உறுதி செய்ய வேண்டும். கோணக்கரை சுடுகாட்டு பகுதியைச் சீரமைக்க வேண்டும். சாலைத் தூய்மைப் பணியில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

கவிதா செல்வம் (திமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட், கையுறை, ஷூ போன்றவற்றை வழங்க வேண்டும். அவா்களின் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

ஆா். முத்துக்குமாா் (மதிமுக): காவிரிப் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா். இப் பாலத்தில் இருசக்கர வாகனங்களை ஒருவழிப்பாதையாக மட்டும் அனுமதிக்க வேண்டும்.

மேயா்: தனியாா் வங்கியின் ஒத்துழைப்புடன் 3000 துப்புரவுப் பணியாளா்களுக்கு மழைகோட், கையுறை போன்றவற்றை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் அனைவருக்கும் கிடைத்துவிடும். காவிரிப் பாலத்தில் போக்குவரத்தை அனுமதித்தால் பணிகள் பாதிக்கப்படும். இருப்பினும், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்.

கூட்டத்தில் நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் ஆண்டில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 219 சாலைகளை ரூ.30.94 கோடியில் சீரமைப்பதற்கான கருத்துருவை தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், சென்னை டிரங்க் ரோடு திருவானைக்கா பேருந்து நிறுத்தம் முதல் சோதனைச்சாவடி வரையிலும், கொள்ளிடம் சோதனைச்சாவடி-சென்னை புறவழிச் சாலை வரையிலும் மையத் தடுப்பில் ரூ. 89 லட்சத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்துதல், உருது தொடக்கப் பள்ளியில் ரூ. 77.25 லட்சம், கோசா தொடக்கப்பள்ளியில் ரூ.96.50 லட்சத்தில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT