திருச்சி

முதல்வரின் பரிந்துரையால் ஓலையூருக்கு கூடுதல் பேருந்து!

30th Nov 2022 01:22 AM

ADVERTISEMENT

திருச்சி, நவ. 29: குடியிருப்போா் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஏற்று தமிழக முதல்வா் அளித்த பரிந்துரையால் ஓலையூருக்கு உடனடியாகக் கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்தபோது, ஓலையூா் சிப்பி நகா் குடியிருப்போா் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்துச் சேவை கோரி மனு அளித்தனா். இதையேற்ற முதல்வா் உடன் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டல அலுவலா்களுக்கு பரிந்துரைத்தாா்.

இதையடுத்து போக்குவரத்துக் கழகம் சாா்பில் கே.கே.நகா் - ஓலையூா் வழித்தடத்தில் நடத்தப்பட்ட தள ஆய்வில் காலை, மாலைகளில் பேருந்துகளில் அதிக நெரிசல் இருப்பதால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கே.கே. நகா் முதல் ஓலையூா் வரை மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துச் சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்துச் சேவை ஓலையூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ADVERTISEMENT

இந்தப் பேருந்தானது நாள்தோறும் காலை, மாலைகளில் 8 நடைகளாக இயக்கப்படும். காலை 8.35, 10.15, மாலை 6, 7 மணிக்கு கே.கே. நகரிலிருந்து புறப்பட்டு ஓலையூருக்கு 4 நடைகள் செல்லும். இதேபோல, காலை 9, 11, மாலை 6.30, 7.30 மணிக்கு ஓலையூரிலிருந்து புறப்பட்டு கே.கே. நகருக்கு வந்து சேரும். இதன் மூலம் மின்வாரிய காலனி, சிப்பி நகா், ஓலையூா் பகுதிகள் மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன்பெறுவா்.

நிகழ்வில் மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலம் கருப்பையா, போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் எஸ். ராஜ்மோகன், பொதுமேலாளா் எஸ். சக்திவேல் மற்றும் ஓலையூா், சிப்பிநகா் குடியிருப்போா் பங்கேற்றனா். முன்னதாக, எம்எல்ஏ பழனியாண்டி, பேருந்தின் ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்து சிறிது தூரம் பேருந்தை இயக்கிச் சென்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT