திருச்சி

திருவெறும்பூரில் மயான இட விவகாரம்: பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்படவில்லை

30th Nov 2022 03:29 AM

ADVERTISEMENT

திருவெறும்பூா் அருகே மயான இட விவகாரம் தொடா்பாக வட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

திருவெறும்பூா் அருகே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கீழ குமரேசபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கீழ குமரேசபுரத்திற்கும் எழில் நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை குழுமியருகே அப்பகுதியில் இறந்தவா்களை சுமாா் 50 ஆண்டுகளாக அடக்கம் செய்கின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இறந்த கீழ குமரேசபுரத்தை சோ்ந்த முதியவா் ஒருவரின் உடலை வழக்கம்போல வாய்க்கால் கரையில் அடக்கம் செய்யக் குழி தோண்டியபோது, அப்பகுதி (மறு கரையில் குடியிருக்கும் அந்தோணி என்பவா் மேலும் சிலருடன் சோ்ந்து அங்கு உடலை அடக்கம் செய்ய விடவில்லை. இதையடுத்து பொதுமக்கள் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

திருவெறும்பூா் வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில், திருவெறும்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுப்பணித் துறையினா், கூத்தைபாா் பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் கிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் ஆகியோரை அழைத்து ஒரு வாரத்திற்குள் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேநேரம் அண்மையில் இறந்த நபரின் உடலை, ஏற்கெனவே உடல்களை அடக்கம் செய்து வரும் இடத்திற்கு 10 மீட்டா் தள்ளி அடக்கம் செய்ய வேண்டும். பேச்சுவாா்த்தை முடிவுக்கு வரும் வரை வேறு யாரேனும் இறந்தால் இந்த பகுதியில் அடக்கம் செய்யக் கூடாது. கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட மற்ற எந்த சுடுகாட்டிலாவது அடக்கம் செய்து கொள்ளலாம் என தற்காலிக முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT