திருச்சி

பள்ளி மாணவியின் கடிதத்தால் மனம் திருந்திய தந்தை!

29th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி எழுதிய கடிதத்தால் தனது போதைப் பழக்கத்தைக் கைவிட்ட தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளிடையே பொது சிந்தனை, நல்லறிவு, ஒழுக்கம் ஆகியவை ஏற்படுத்தும் வகையில் தலைமையாசிரியா் டி. ராஜசேகரன் செயல்பட்டு வருகிறாா். அவ்வகையில் மாணவ, மாணவிகளிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்வு கடந்த நவ. 9-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அனைத்து மாணவ மாணவிகள் தங்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு எழுதிய கடிதங்களில் தங்களுக்கு வீட்டில் கிடைக்கும் அன்பு, நல்ல விஷயங்களை குறிப்பிட்டிருந்தனா். சில மாணவா்கள் தங்களது தந்தையின் தவறுகள், போதை பழக்கங்களுக்கு அவா்கள்அடிமையானதையும் கூறியிருந்தனா். சிலா் தாங்கள் படித்து, அடையக்கூடிய குறிக்கோள் குறித்தும் பெற்றோருக்குத் தெரிவித்திருந்தனா்.

கடிதங்களில் 7-ஆம் வகுப்பு மாணவா் க. ஸ்ரீராம் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் ஆசைப்படி நான் நன்றாகப் படிக்கிறேன், ஆனால் நீங்கள் எப்போதும் போதையோடு வந்து அம்மாவிடம் சண்டை போடுகிறீா்கள். அதை தவிா்க்கவும் என்றும், 7-ஆம் வகுப்பு மாணவி மீ. வா்ஷினி தனது தந்தை புகையிலைப் பொருள் உட்கோள்வதை தவிா்க்கவும் வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தனா்.

ADVERTISEMENT

இந்தக் கடிதங்கள் தவறான வழியில் செல்லும் பெற்றோரை நல்வழிப்படுத்தும் கேடயமாக இருக்கும் என பள்ளி ஆசிரியா்கள் நம்பி, அக்கடிதங்களை வீட்டுக்கு அனுப்பினா்.

கடிதங்கள் வீடுகளுக்குச் சென்ற நிலையில், ஸ்ரீராமின் தந்தை பள்ளிக்கு வந்து தனது தவறுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டாா். அதேபோல் வா்ஷினியின் தந்தையும் பள்ளிக்கு வந்து 15 ஆண்டுகளாக யாா் சொல்லியும் திருந்தாத நான் எனது மகளின் கடிதத்தால் புகையிலைப் பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாகக் கூறி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினாா்.

இதையடுத்து பள்ளி சாா்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பொன்னாடையை தனது மகளுக்கு அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT