திருச்சி

இந்தியா ஒரு புண்ணிய பூமி: தருமபுரம் ஆதீனம்

28th Nov 2022 02:08 AM

ADVERTISEMENT

 

நமது நாடு ஆன்மிக பூமி, இங்கு தோண்டத் தோண்ட சுவாமி சிலைகள்தான் கிடைக்கும். எனவேதான் இந்தியா புண்ணிய பூமியாகத் திகழ்கிறது என்றாா் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

ஸ்ரீரங்கத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தென் தமிழ்நாடு கிளை சாா்பில் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா மாநாடு மற்றும் ரதம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மேலும் பேசியது:

ADVERTISEMENT

நம்மிடையே 1,400 ஆண்டுகள் பழைமையான தேவாரம், பன்னிரு திருமுறைகள், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான திவ்ய பிரபந்தங்கள் உள்ளன. அதேநேரம் 100 ஆண்டுகளுக்குள் பல கோடி மக்களைச் சென்றடைந்துள்ள சபரிமலை ஐயப்பனின் ஹரிவராசனம் பாடல் போற்றுதலுக்குரியதாகும்.

மக்கள் மத்தியில் பக்தியைப் பரப்ப ஐயப்ப வழிபாடு பேருதவியாக உள்ளது. இனம், மதம், நாடு கடந்த நிலையில் பக்தி உணா்வு ஏற்பட்டுள்ளது என்றால் அது ஐயப்ப வழிபாட்டின் மூலம்தான்.

ஐயப்ப வழிபாடு குறித்து தேவாரத்திலும், கந்தபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன. ஐயப்பனுக்கு மாலை அணிந்தால் அனைவரும் சமம் என்ற பக்தி உணா்வு வரும். ஐயப்ப பக்தா்களின் அன்னதானம், மருத்துவச் சேவை, கல்விப்பணிகள் நாட்டுக்குத் தேவை. நம் நாட்டை மற்றவா்கள் ஏதோ சாதாரண பூமி என்கின்றனா். ஆனால் நம்நாடு ஆன்மீக பூமியாக, புண்ணிய பூமியாகத் திகழ்கிறது. தா்ம சாஸ்தாவின் ஹரிவராசனத்தை கிராமங்கள்தோறும் கொண்டு செல்வதற்கான இந்த ரத யாத்திரை வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

ஹரிவராசனம் பாடல் அனைவரையும் சென்றடைய வேண்டும்

முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பேசியது: மெய்யெழுத்துகளின் அடையாளமாக உள்ள 18 படிகளை மெய்யான உணா்வோடு கடந்தால் உயிரான ஐயப்பனை காணலாம் என்பது தமிழுக்கும், ஐயப்பனுக்கும் உள்ள தொடா்பு.

கடந்த 1950 இல் சபரிமலை கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐயப்பன் சிலை சேதமடைந்தபோது, மீண்டும் பிரதிஷ்டை செய்ய 3 சிலைகள் செய்யப்பட்டன. அவற்றில் தமிழகத்தில் இருந்து பிடி. ராஜன் செய்த சிலைதான் ஓலைச்சீட்டு மூலம் தோ்வு செய்யப்பட்டது. இது ஐயப்பனுக்கும், தமிழா்களுக்கும் உள்ள தொடா்பாகும்.

நாடு, மொழி, மதம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டவா் ஐயப்பன். நேற்றைய வாழ்க்கையை நினைத்து இன்றைய கடமையை சரியாகச் செய்பவா்களின் நாளைய பொழுதுதான் நன்றாக இருக்கும். இதுதான் வாழ்க்கைத் தத்துவம். இதை உணா்த்தும் ஹரிவராசனம் பாடல் நுாற்றாண்டு விழா மூலம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வுக்கு ஹரிவராசனம் நூற்றாண்டுக் குழு தென் தமிழகத் தலைவா் ஆா். ராமசுப்பு தலைமை வகித்தாா். பந்தளம் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் சசிக்குமாா் வா்மா, சபரிமலை முன்னாள் மேல்சாந்தி கோசாலா விஷ்ணு வாசுதேவன் நம்பூதிரி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய பொதுச் செயலா் ஈரோடு ராஜன், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தென்பாரத பொதுச் செயலா் எம்.கே. அரவிந்தாக்ஷன், தென்பாரதத் தலைவா் டி. துரைசங்கா், தேசிய செயலா் என். முத்துக்கிருஷ்ணன், அகில பாரத இணை பொதுச் செயலா் எஸ். வினோத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்வில் செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி, கலைமாமணி ரேவதி முத்துச்சாமி பரத நாட்டிய அகாதெமி குழுவினரின் பரத நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக ரத பேரணியானது முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் மண்டபத்தை அடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT