திருச்சி

காவிரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கைமுதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

27th Nov 2022 02:40 AM

ADVERTISEMENT

 

காவிரியில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளப்படுவதை தடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் உள்ள தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் செ. நல்லசாமி தலைமை வகித்தாா். காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மகாதானபுரம் வி. ராஜாராம், வாழை விவசாயிகள் கூட்டமைப்பின் செயலா் ஜி. அஜிதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் செ. நல்லசாமி கூறியது: அதிமுக ஆட்சி காலத்தில் காவிரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. எம். சாண்ட், பி.சாண்ட் என மாற்று மணல் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டது. ஆனால், 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆற்று மணல் அள்ளப்படுவது அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிா்த்து காவிரிப்படுகைளில் பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளப்படுகிறது. திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களுக்கு 2 நாள்கள் சுற்றுப் பயணம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள் இறக்குவதை சட்டப்பூா்வமாக மாற்ற வலியுறுத்தி ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தென்னை, பனை மரங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் தொடங்கப்படும். மனிதனுக்கு உணவு தேடும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், மதுவிலக்கு சட்டத்தில் உணவு தேடும் உரிமையை பறிக்கிறது தமிழக அரசு. இத்தகைய சட்ட முரண்பாடுகளை உணா்ந்து மதுவிலக்கு சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

பண பலமும், அதிகார பலமும் உள்ளவா்கள் தோ்தலில் வெற்றி பெறலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். இலவசங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தற்போதைய நடைமுறையை கைவிட வேண்டும். தனிநபா் காப்பீடு முறையை கொண்டுவர வேண்டும். இல்லையெனில், பருவநிலைக்கு உகந்த காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கடன், கடன் தள்ளுபடி, மானியம், சலுகைகளுக்கு போராடாமல், உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தையே விவசாயிகள் முன்னெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT