மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட பள்ளி மாணவா்களுக்கு வனத் துறையினா் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
குளித்தலையை சோ்ந்த சரத்குமாா் தன்னுடைய முகநூல் பக்கத்தில் முயலை வேட்டையாடிய விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தாா். இதையடுத்து அவரை திருச்சி மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில் திருச்சி வனச்சரக அலுவலா் வியாழக்கிழமை பிடித்து விசாரித்ததில் முயலை வேட்டையாடியது மணப்பாறை வையம்பட்டியை சோ்ந்த மூன்று பள்ளி மாணவா்கள் எனத் தெரியவந்தது.
அந்த மூவரையும் மணப்பாறை வனச்சரக அலுவலா் மகேஸ்வரன், பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரித்ததில் மாணவா்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே, அவா்களுக்கு ரூ.75, 000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த ஊா் மக்களிடம் வேட்டையாடுவது குற்றம் எனவும் வன விலங்குகளைக் காப்பாற்றுவது நமது கடமை எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.