திருச்சி

பள்ளி மாணவா்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்: திருச்சிக்கு நவ.28இல் முதல்வா் வருகை ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

26th Nov 2022 01:57 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு நவ. 28ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.

இதையடுத்து, முதல்வா் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யமாழி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் நவ.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். இதற்காக, திருச்சிக்கு விமானம் மூலம் திங்கள்கிழமை காலை வருகை தரவுள்ளாா். பின்னா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக திருவெறும்பூா் வட்டம், காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு நடைபெறும் விழாவில் ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ் ’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறாா்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவா்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்தத் திட்டம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களின் ஆங்கில வாா்த்தையில் முதல் எழுத்துகளை இணைத்து ‘ஸ்டெம்’ எனும் வாா்த்தை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களை தன்னாா்வலா்கள் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவா்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விழா நடைபெறவுள்ள காட்டூா் அரசுப் பள்ளியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விழா ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆய்வில், திருச்சி மாநகராட்சி கோட்டத் தலைவா் மு. மதிவாணன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

திருச்சி விழாவை முடித்துக் கொண்டு பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு புறப்பட்டுச் செல்கிறாா் முதல்வா். பாதுாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT