திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையின் வடக்கு வாயில் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இந்தப் பணிமனையின் பிரதான 3 வாயில்களில் வடக்கு வாயில் பகுதியும் (நாா்த் ‘டி‘ கேட்) ஒன்று. இந்த வடக்கு வாயில் வழியாக வடக்கு டி குடியிருப்பு பகுதியில் உள்ள தொழிலாளா்கள், அரியமங்கலம், காட்டூா், திருவெறும்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ரயில்வே பணிமனை தொழிலாளா்கள் பணிக்கு வந்து செல்கின்றனா்.
மேலும் ரயில் மூலம் வரும் பணியாளா்கள் சிலரும் பொன்மலை மற்றும் மஞ்சத்திடல் ரயில் நிலையங்களிலிருந்து இந்த வழியாக நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் வருவது உண்டு.
வடக்கு வாயில் பகுதிக்குச் செல்லும் சாலை மண் கப்பி சாலையாக இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. மேலும் அண்மையில் பெய்த மழையால் இந்த சாலை சேறும், சகதியுமாகவும் ஆகியுள்ளது. இதனால் தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
தற்போது திருச்சி பொன்மலை பணிமனையில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பணியாளா்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து சோ்வது அவசியமாக உள்ளது.
எனவே இந்தச் சாலையை மேம்படுத்த வேண்டும் என ரயில்வே தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.