திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களிடையே கலை ஆா்வத்தை வளா்த்தெடுக்கும் வகையில் 5 முதல் 16 வயதுடையோருக்கு கலைப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவா்களுக்கு கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வார விடுமுறை நாளான சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரையும், ஞாயிறு காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையும் குரலிசை, பரதம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த மாணவா்களுக்கு மட்டுமின்றி இதர அனைவருக்கும் பரதம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
செவ்வியல் கலையில் பரதம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். நாட்டுப்புறக் கலையில் தமிழகத்தின் மாண்பை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். அதிகபட்சம் 5 நிமிடங்கள் அனுமதிக்கப்படும்.
குரலிசைப் போட்டியில் கா்நாடக இசை தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணா்வுப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.
ஓவியப் போட்டியில் பென்சில் கிரையான் வண்ணங்கள், போஸ்டா் கலா், வாட்டா் கலா், ஆயில் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் வரையலாம்.
ஓவியத்தாள் (40-க்கு 30 செ.மீ), வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தேவையானவற்றைப் போட்டியாளா்களே கொண்டு வருதல் வேண்டும். அனைத்துப் போட்டிகளிலும் தனி நபராகப் பங்கேற்கலாம்.
5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். இதில், முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
விருப்பமுடையோா் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் கலை பண்பாட்டு வளாகம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம் திருச்சி-6 என்ற முகவரிக்கு வரும் 20ஆம் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.