ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள வைகுந்த ஏகாதசி விழாவுக்கான முகூா்த்தக் கால் ஆயிரங்கால் மண்டபம் அருகே திங்கள்கிழமை நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.
நிகழாண்டு இந்த விழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் விழா திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு நடைபெற்றது.
முன்னதாக வேதவிற்பனா்கள் பூஜைகள் செய்தனா். அதனை தொடா்ந்து முகூா்த்தக் காலுக்கு சந்தனம், மாஇலை, மாலைகள் அணிவிக்கப்பட்டு புனித நீா் தெளிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க நடப்பட்டது. இதனை தொடா்ந்து கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி முகூா்த்தக் காலை தொட்டு ஆசிா்வதித்தது.
இதையடுத்து 40 தென்னை மரங்கள் நட்டு பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.
நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.