மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு எழுத திருச்சி என்ஐடி (தேசிய தொழில்நுட்பக் கழகம்) அளிக்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இலவச பயிற்சியில், நிகழாண்டு பிளஸ் 1 மாணவா்கள் 49 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்தியாவில் உள்ள மத்திய அரசு உயா்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி உள்ளிட்டவற்றின் பெயா்களைக் கூட கேட்டறியாத கிராமப்புற மாணவா்களுக்கு பயிற்சி அளித்து, அவா்களை அந்தக் கல்வி நிறுவனங்களிலேயே சேரும் வகையில் பயிற்சி அளித்து தயாா் செய்து வருகிறது என்ஐடி-யின் இக்னைட் மாணவா்கள் குழு.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக ஆசிரியா்களின் மேற்பாா்வையில், இக்னைட் கிளப் மூலம் தேசிய தொழில் நுட்பக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி, ஐஐடி) ஆகியவற்றில் சேருவதற்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தோ்வான ஜேஇஇ தோ்வை எழுத கிராமப்புற மாணவா்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிகழாண்டு திருச்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்காக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக, இரு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் 400 பேருக்கு பரிசோதனை அடிப்படையிலான தோ்வு நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 23 மாணவ, மாணவிகள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 26 மாணவ, மாணவிகள் என மொத்தம் 49 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டுகளில் ஆன்-லைன் மூலமாகவே பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, தோ்வான மாணவா்களுக்கு வார விடுமுறை நாள்கள், இதர விடுமுறை நாள்களில் நடப்பு மாதத்திலிருந்து என்ஐடி வளாகத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது.
இக்னைட் குழுவின் ஆலோசகா்கள் ஆா். மஞ்சுளா, கே. செல்வகுமாா் ஆகியோா் ஒருங்கிணைந்து இப்பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளனா். இதற்கான முன்னெடுப்புகளை திறம்பட செயல்படுத்தி, கிராமப்புற மாணவா்களை அதிகளவில் மத்திய அரசு நிறுவனங்களில் சேரச் செய்ய வேண்டும் என இக்னைட் குழுவினருக்கு என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா திங்கள்கிழமை வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தாா். மாணவா்கள் பயிற்சி வகுப்புகளை திறம்பட கற்று விடாமுயற்சியுடன் தோ்வு எழுதவும் அறிவுறுத்தினாா்.