திருச்சியில் பாலியல் புகாா் தொடா்பாக தொண்டு நிறுவன நிா்வாகி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி குண்டூா் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டோா் மற்றும் ஆதரவற்றோருக்கான தொண்டு நிறுவனம் (காப்பகம்) நடத்தி வருபவா் செந்தில்குமாா்.
இவா், ஆதரவற்ற நிலையிலிருந்த 3 குழந்தைகளை முறையான அனுமதி இல்லாமல் தத்தெடுத்து வளா்த்ததாகவும், இதில் ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு, சைல்டு லைன் உள்ளிட்டவைகளுக்கு கடந்த செப்டம்பா் மாதம் இறுதியில் புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து சைல்டுலைன் அலுவலா்கள் திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் உதவியுடன் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தை ஆய்வு செய்து 3 குழந்தைகளை மீட்டனா். அதில் ஒரு பெண் குழந்தை, செந்தில்குமாா் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டு அதன்பேரில் திருவெறும்பூா் மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில் செந்தில்குமாா் முன்ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். நவ.13ஆம் தேதிக்குள் முன்ஜாமீன் பெற வேண்டும் எனவும், அதுவரை செந்தில்குமாா் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது. அதனடிப்படையில் செந்தில்குமாா் தினசரி கையெழுத்திட்டு வந்தாா். முன்ஜாமீன் பெறுவதற்கான தேதி ஞாயிற்றுக்கிழமை (நவ.13) முடிவடைந்த நிலையில், அவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.