திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த காா் திங்கள்கிழமை நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்தது. இதில் 6 போ் காயமடைந்தனா்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வசித்து வருபவா் ராஜேஷ்(41) இவா், தனது தாய் கல்யாணி(63), மனைவி அமுதா(36) மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்று விட்டு திங்கள்கிழமை மீண்டும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தனா்.
மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கைக்காட்டி அருகே சென்றுக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஒரு எலக்ட்ரிக் பைக் தீப் பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், காரில் பயணித்த 5 போ் மற்றும் எலக்ட்ரிக் பைக் உரிமையாளா் கைகாட்டி வ.கருப்பையா(40) ஆகியோா் காயமடைந்தனா். வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனா்.