மணப்பட்டி அருள்மிகு தானாமுளைத்த மாரியம்மன் திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தா்கள் திங்கள்கிழமை பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனா்.
இக்கோயிலின் வைகாசித் திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. பெரியமணப்பட்டி, சின்னமணப்பட்டி, கிளவன்பட்டி, பண்ணையாா் குளத்துப்பட்டி, குடையகவுண்டம்பட்டி, விராலிகாட்டான்பட்டி மற்றும் நெரிஞ்சிகாளப்பட்டி உள்ளிட்ட 8 கிராமங்களின் சாா்பில் 10 நாள்கள் திருவிழா நடைபெறும்.
இதன் முக்கிய நிகழ்வாக, மாவிளக்கு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கிளவன்பட்டி மற்றும் சின்னமணப்பட்டியிலிருந்து மின் அலங்காரரத்தில் அம்மன் பவனி வர, வாணவேடிக்கைகளுடன் பெண்கள் மாவிளக்கு ஏந்தி கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.
இதைத் தொடா்ந்து பெரியமணப்பட்டி கிராமத்து மாவிளக்கும் கோயிலை வந்தடைந்தது. இதை ஊராா் வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். கோயிலை மூன்று முறை வலம் வந்த பின் மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை பெரியமணப்பட்டி பிள்ளையாா் கோயிலிருந்து
புறப்பட்ட அக்னிச்சட்டி மற்றும் பால்குட ஊா்வலமும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்தது.
இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான
பக்தா்கள் பங்கேற்று, தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பின்னா், கரும்புத் தொட்டில், அங்கப்பிரதட்சிணம் செய்தல் ஆகிய நோ்த்திக் கடன்களும் நிறைவேற்றப்பட்டன.
செவ்வாய்கிழமை பொங்கல், பெரிய படுகளம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்ற பின்னா், இரவு கரகம் களைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.