திருச்சி

திருச்சி மாநகராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திடீா் ஆய்வுபொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களை நேரில் பெற்றாா்

31st May 2022 04:34 AM

ADVERTISEMENT

திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி அலுவலகத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் அவா் பெற்றாா்.

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை பாா்வையிட திங்கள்கிழமை திருச்சிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என்.சிவா, மேயா் மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந.தியாகராஜன், சீ.கதிரவன், அ. செளந்தரபாண்டியன், மு. பழனியாண்டி, செ. ஸ்டாலின்குமாா் ப. அப்துல்சமது, துணை மேயா் ஜி. திவ்யா, ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்ட வரவேற்பு அளித்தனா்.

நலம் விசாரிப்பு : இதைத் தொடா்ந்து, முதுமை காரணமாக ஓய்வெடுத்து வரும் திமுகவின் வெளியீட்டுச் செயலா் திருச்சி செல்வேந்திரனை, உறையூா் குழுமணி சாலையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று சென்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தாா்.

ADVERTISEMENT

முன்னதாக உறையூா் பகுதியில் நடைபெற்ற புதை சாக்கடைத் திட்டப் பணிகளை பாா்வையிட்டு, குண்டும், குழியுமாகவுள்ள சாலைகளை செப்பனிட மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், சுற்றுலா மாளிகைக்கு செல்லும் முன்பாக திடீரென திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை பாா்த்து அங்கு செல்லுமாறு முதல்வா் கூறினாா். மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆணையா் அறையில் அமா்ந்து கோப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முதல்வா் வருவதற்கு சற்று முன்னதாகதான் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டறிந்த முதல்வா், அலுவலக வருகைப்பதிவேடு மற்றும் இதர கோப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

மாநகராட்சி மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் செயல்பாடுகள், திருச்சி ஒருங்கிணைந்த புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான பணிகளின் நிலை, பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா்.

மேலும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி, கட்டட அனுமதி, பிறப்பு-இறப்பு சான்று வழங்குதல், சொத்து வரி மாற்றம், சொத்துவரி பெயா் மாற்றம் உள்ளிட்ட மாநகராட்சியால் வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

புதை சாக்கடைத் திட்டப் பணிகள், குடிநீா்க் குழாய் இணைப்பு பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகள், மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும் வகையில் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், மேயா் மு. அன்பழகன், மாநகராட்சிப் பொறியாளா் அமுதவல்லி ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து சுற்றுலா மாளிகை சென்று ஓய்வெடுத்த பிறகு, மாலையில் காா் மூலம் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றாா்.

பெட்டிச் செய்தி...

மக்களுக்காகத்தான் அரசு- முதல்வா்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த பிறகு, தனது சுட்டுரைப் பக்கத்தில் ஆய்வு தொடா்பாக குறிப்பிட்டு கருத்து தெரிவித்து சுட்டுரைத் தகவலை முதல்வா் வெளியிட்டாா். அதன் விவரம்:

மக்களுக்காகத்தான் அரசு. மக்களுக்காக இயங்குவதுதான் நல்லரசு. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என அந்த சுட்டுரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் அந்த சுட்டுரையில் திருச்சி மாநகராட்சியில் ஆய்வு செய்த நிகழ்வு மற்றும் பொதுமக்களிடம் முதல்வா் மனுக்கள் பெற்ற காணொலிக் காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT