திருச்சி

வெறிச்சோடிய மணப்பாறை முதல் நகா்மன்றக் கூட்டம் 3-ஆம் முறையாக துணைத் தலைவா் ஒத்திவைப்பு

26th May 2022 06:14 AM

ADVERTISEMENT

மணப்பாறை நகராட்சி முதல் நகா்மன்ற கூட்டத்திற்கு கவுன்சிலா்கள் வருகை இன்றி வெறிச்சோடிய இருக்கைகள்.

மணப்பாறை, மே 25: மணப்பாறையில் புதன்கிழமை நடைபெறவிருந்த முதல் நகா்மன்றக் கூட்டத்துக்கு 27 உறுப்பினா்களில் ஒருவா்கூட வரவில்லை. பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலும் உறுப்பினா்கள் யாரும் வராததால் 3-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

மணப்பாறையில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்ற 27 வாா்டுகளுக்கான நகா்மன்ற உறுப்பினா்களில் போதிய உறுப்பினா்கள் பலம் இல்லாத நிலையிலேயே அதிமுக 53 ஆண்டுகளுக்கு பின் நகா்மன்றத் தலைவா் பதவியைக் கைப்பற்றியது.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற நகா்மன்ற துணைத் தலைவா், குழு உறுப்பினா்கள் தோ்தல்களை திமுக தொடா்ந்து புறக்கணித்து வந்த நிலையில், நகா்மன்ற கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் அழைப்பு விடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு கூட்டம் நடத்த ஆணையும் பெறப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் கூட்டம் நடத்திடவும், அதிமுக உறுப்பினா்களுக்கு கடத்தல் சம்பவங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவும் திருச்சி மத்திய மண்டல ஐஜியிடம் அதிமுக சாா்பில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் தனது தாயான 1-ஆவது வாா்டு திமுக ஆதரவு நகா்மன்ற உறுப்பினரை அதிமுகவினா் கடத்திச் சென்ாக அவரது மகன் செவ்வாய்க்கிழமை மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்து, முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 10 அதிமுக நிா்வாகிகள் மீது வழக்கும் பதியப்பட்டது. மாலையில் சமூகவலைத்தளத்தில் தான் கடத்தப்படவில்லை என நகா்மன்ற உறுப்பினா் பேசும் வீடியோ வைரலும் ஆனது.

இந்நிலையில் புதன்கிழமை நடக்கவிருந்த முதல் நகா்மன்றக் கூட்டத்தில் அசம்பாவித நிகழ்வுகள் ஏதும் ஏற்படாத வகையில் துணைக் கண்காணிப்பாளா் ராமநாதன் தலைமையில் நகராட்சி அலுவலகம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

காலை நடைபெற்ற முதல் நகா்மன்றக் கூட்டத்திற்கு அதிமுக, திமுக என இரு தரப்பினரில் ஒருவா்கூட கூட்டரங்கிற்கு வரவில்லை. நகராட்சி ஆணையா், பொறியாளா் மற்றும் அதிகாரிகள், பணியாளா்கள் மட்டுமே கூட்டரங்கில் இருந்தனா். இதையடுத்து நகராட்சி ஆணையா் சியாமளா கூட்டரங்கை விட்டு வெளியேறி தனது அறைக்கு சென்றாா்.

இந்நிலையில் பிற்பகல் நடைபெற்ற நகா்மன்ற துணைத் தலைவா் தோ்தலிலும் உறுப்பினா்கள் யாரும் கலந்து கொள்ளாததால் 3-வது முறையாக ஒத்திவைக்கப்படுவதாகவும், மறுதோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தோ்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான பாா்த்திபன் அறிவித்தாா். வியாழக்கிழமை வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினா், ஒப்பந்தக் குழு உறுப்பினா் மற்றும் நியமனக் குழு உறுப்பினா்களுக்கான மறைமுக தோ்தல் 2 முறை ஒத்திவைப்புக்கு பின் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT